சேலம்: வாழப்பாடி அருகே இரண்டு கிராமங்களில் வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை மீறி காட்டில் இருந்து வங்கா நரிகளை பிடித்து வந்து வங்கா நரி ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியுள்ளனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே உள்ள சின்னம்மநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள் ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி, வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்துவது வழக்கம். அட்டவணை பட்டியலில் உள்ள நரிகளை காட்டுக்குள் சென்று பிடிக்கக் கூடாது என வனஉயிரினங்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வாழப்பாடி அருகே உள்ள வனப்பகுதிக்குள் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து வங்கா நரியை பிடித்து வந்து, அதற்கு மாலை அணிவித்து, கிராமத்துக்குள் ஊர்வலமாக கொண்டு சென்று, அங்குள்ள மாரியம்மன் கோயிலில் வழிபாடு நடத்தி, மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டுவிடுவது வழக்கம்.
இதனால், இந்தாண்டு வனத்துறை அதிகாரிகள் தடை விதிக்கப்பட்டுள்ள வங்கா நரி ஜல்லிக்கட்டில் கிராம மக்கள் ஈடுபடுகின்றனரா? என ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அதனையும் மீறி பொங்கல் பண்டிகை முடிந்து இரண்டு நாட்கள் கடந்த நிலையில், வாழப்பாடி அருகே உள்ள கொட்டவாடி, சின்னம்மநாயக்கன்பாளையம் ஆகிய இரண்டு கிராமங்களை சேர்ந்தவர்கள் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வங்கா நரியை பிடித்து வந்து, வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தியுள்ளனர்.
கொட்டவாடியை சேர்ந்த சிலர் வங்கா நரியை கூண்டுக்குள் அடைத்து வைத்து, மாரியம்மன் கோயிலில் பூஜை செய்து, சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பின்னர், கிராமம் முழுவதும் உள்ள வீதிகளில் கூண்டில் அடைக்கப்பட்ட வங்கா நரியை ஊர்வலமாக தூக்கி சென்று, வங்காநரி ஜல்லிக்கட்டு விழாவை நடத்தி முடித்தனர். அதேபோல, சின்னம்மநாயக்கன்பாளையம் கிராமத்தை சேர்ந்த சிலர் காட்டுக்குள் புகுந்து வங்கா நரியை பிடித்து வந்து, கோயிலில் பூஜை செய்து, வழிபாடு நடத்தி வங்கா நரி ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து வாழப்பாடி வனச்சரகர் துரைமுருகன் மற்றும் வனத்துறை அதிகாரிகள் கொட்டவாடி, சின்னம்மநாயக்கன்பாளையத்தில் முகாமிட்டு, வங்கா நரி ஜல்லிக்கட்டு விழாவை நடத்தியவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.