திருமலை: இன்சூரன்ஸ் பணம் ரூ.7.4 கோடிக்காக சினிமா பாணியில் கூலித்தொழிலாளி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அரசு தலைமை செயலக ஊழியர், குடும்பத்தினர் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் பீம்லாதாண்டா கிராமத்தை சேர்ந்தவர் தர்மாநாயக் (44). தலைமை செயலகத்தில் உள்ள நீர்ப்பாசனத்துறை அலுவலகத்தில் முதுநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நீலா. இவர்கள் ஐதராபாத் குட்டகபல்லியில் வசித்து வருகின்றனர். அரசு பணியில் உள்ள தர்மாநாயக்கிற்கு அதிக பணம் சம்பாதிக்கவேண்டும் என ஆசை ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2018ம் ஆண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்தார். முதலில் நல்ல லாபம் கிடைத்துள்ளது.
பின்னர் கொரோனா ஊரடங்கு, உக்ரைன் போர் காரணமாக பங்குச்சந்தையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டதால் ₹80 லட்சம் வரை கடன் ஏற்பட்டுள்ளது. கடனை அடைப்பது தொடர்பாக தர்மாநாயக் குடும்பத்தினர், உறவினர்களிடம் சேர்ந்து திட்டம் தீட்டினார். அப்போது அவருக்கு பணத்தை இன்சூரன்ஸ் மூலம் திரட்ட ஐடியா கிடைத்துள்ளது. இதனால் திட்டப்படி சுமார் 25 இன்சூரன்ஸ் நிறுவனத்தில் ₹7.4 கோடிக்கு காப்பீடு எடுத்துள்ளார். ஆனால், தனது இறப்புக்கு பின்னர்தான் பணம் கிடைக்கும் என்பதால், தான் இறப்பதற்கு பதில் தன்னை போன்ற ஒருவரை எரித்துக்கொன்று இன்சூரன்ஸ் கம்பெனியில் பணத்தையும், கருணை அடிப்படையில் மனைவிக்கு அரசு வேலை பெறவும் திட்டமிட்டுள்ளார்.
இதற்காக தன்னைபோல உள்ளவரை தேடினார். கடந்த ஆண்டு நவம்பரில், நிஜாமாபாத் மாவட்டம் நவிப்பேட்டையைச் சேர்ந்த அஞ்சய்யா என்ற கூலித்தொழிலாளியை அடையாளம் கண்டார். அவரை தனது மாந்தோப்பில் மாதம் ₹20 ஆயிரம் சம்பளத்தில் வேலை தருவதாக கூறி அழைத்து வந்தார். கடந்த டிசம்பர் மாதம் பழைய காரை விலைக்கு வாங்கினார். அதில் கடந்த 7ம்தேதி அஞ்சய்யாவை கொல்ல தனது அக்கா மகன் தேஜாவத்னிவாஸ் என்பவரை நிஜாமாபாத்திற்கு அழைத்துச்சென்றார். ஆனால் அஞ்சய்யா மதுஅருந்தி இருந்தார். இந்தநிலையில் கொன்றால் உடற்கூறு ஆய்வில் தெரிந்துவிடும், ேமலும் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்பதால் அவரை கொல்ல முடியவில்லை. பின்னர் அங்குள்ள ஒரு லாட்ஜில் தங்க வைத்தனர்.
அன்று மதியம் உணவு சாப்பிட்டு வரும்படி அஞ்சய்யாவிடம் பணம் கொடுத்தனர். ஆனால் சாப்பிட சென்ற அவர் வரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த தர்மாநாயக், அவரது அக்கா மகன் தேஜாவத்னிவாஸ், நிஜாமாபாத் ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்று கூலித்தொழிலாளி பாபு(44) என்பவரை வேலைக்கு அழைத்தனர். அவரை காரில் ஏற்றிக்கொண்டு பாசரா சரஸ்வதி கோயிலுக்கு அழைத்துச் சென்று மொட்டையடித்தனர். பின்னர் அவருக்கு புதிதாக ஆடைகள் அணிவித்தனர். அன்றிரவு 11.30 மணியளவில் மேடக் மாவட்டத்தில் டெக்மால் மண்டல் வெங்கடாபுரம் ஏரிக்கரை அருகே அவரை காரில் அழைத்து வந்தனர். ஓரிடத்தில் காரை நிறுத்தி கூலித்தொழிலாளி பாபுவை கார் முன் சீட்டில் அமரும்படி கூறினர். இதனால் சந்தேகம் அடைந்த பாபு, மறுப்பு தெரிவித்தார்.
இதனால் ஆத்திரமடைந்த தர்மாநாயக் மற்றும் அவருடன் வந்தவர்கள் கட்டையால் தாக்கினர். இதில் மயங்கிய அவரை காரின் முன்சீட்டில் அமரவைத்தனர். கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் பாபு உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்டார். இறந்தவர் தர்மாநாயக் என்பதை தெரிந்துகொள்வதற்காக அவர் பயன்படுத்திய சில பொருட்களை அங்கு வீசிவிட்டு வந்தனர். இதற்கிடையில் தர்மாநாயக்கின் குடும்பத்தினர் காணவில்லை என்ற புகாரின்பேரில் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் பயன்படுத்திய பொருட்களை கொண்டு, தர்மாநாயக்கின் மனைவிக்கு தகவல் தெரிவித்து வரவழைத்தனர். அங்கு அவர் காரில் எரிந்த நிலையில் இருப்பது தனது கணவர்தான் என்று கூறினார்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது காரில் எரிந்த நிலையில் இருந்த சடலத்தின் கால் முழுவதும் எரியாத நிலையில் இருந்ததை கண்ட அவர்கள், அந்த கால் அரசு ஊழியருக்கு உண்டான கால் போன்று இல்லாமல் கூலித்தொழிலாளியை போன்று இருந்ததால் சந்தேகம் அடைந்தனர்.
பின்னர் அவர்கள் தர்மாநாயக்கின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களது நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்தனர். மேலும் கொலை நடந்த இடத்தில் இருந்த சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் பல்வேறு விவரங்களை சேகரித்தனர். அப்போது, தர்மாநாயக் போன்று வேறு ஒருவரை காரில் எரித்துக்கொன்றது தெரியவந்தது.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், தர்மா நாயக்கிற்கு அதிகளவு கடன் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி இன்சூரன்ஸ் காப்பீடு எடுத்து அந்த பணத்தை பெறுவதற்காக வேறு ஒருவரை கொன்று பணத்தை பெற முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தர்மாநாயக் மற்றும் உடந்தையாக இருந்த மனைவி நீலா (43), அக்கா மகன் தேஜாவத் னிவாஸ் (30), சகோதரி சுந்தா (48), தர்மாவின் 17 வயது மகன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து மேடக் எஸ்பி ரோகிணி பிரியதர்ஷினி கூறுகையில், கொலை செய்யப்பட்ட நபர் பாபு என அடையாளம் காணப்பட்டாலும், முழு விவரம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்றார். மலையாளத்தில் நடிகர் துல்கர்சல்மான் நடித்த குரூப் என்ற படத்தில் துல்கர் சல்மான், இன்சூரன்ஸ் பணத்திற்காக தன்னை போன்ற ஒருவரை எரித்துக்கொன்றுவிட்டு இன்சூரன்ஸ் பணத்துடன் வெளிநாட்டுக்கு சென்றுவிடுவார். அதேபோல் இந்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.