கடலூர்: கடலூரில் 2 ஆண்டுகளுக்குப் பிறகு ஆற்றுத்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் சாமிகளுக்கு தீர்த்த வாரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். பொங்கல் பண்டிகையின் 5ம் நாளன்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அனைத்து நதிகளிலும் கங்கை நீர் கலப்பதாக ஐதீகம். இதனால் அனைத்து நீர் நிலைகளிலும் சாமிகளுக்கு தீர்த்தவாரி நடைபெறும். இந்நிலையில் கடலூர் தென்பெண்ணையாற்றில் இன்று ஆற்று திருவிழா கொண்டாடப்படுகிறது.
இதனால் கடலூர் மஞ்சக்குப்பம் தென்பெண்ணை ஆற்றங்கரையில் தின்பண்ட கடைகள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான் கடைகள், பிளாஸ்டிக் கடைகள், ராட்டினங்கள், குறிப்பாக ஆற்றுத்திருவிழாவில் மட்டுமே விற்கப்படும் சுருளிக்கிழங்கு கடைகளும் வைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏராளமான மக்கள் கூடுவார்கள் என்பதால் கடலூர் மாவட்ட எஸ்பி சக்தி கணேசன் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தென்பெண்ணையாற்றின் கரையில் கண்காணிப்பு கோபுரமும் அமைக்கப்பட்டு ஒலிபெருக்கி மூலம் பொது மக்களுக்கு அறிவுரை வழங்கிக் கொண்டே இருந்தனர்.
மேலும் வண்டிப்பாளையம், புருகீஸ்பேட்டை, முதுநகர், மஞ்சக்குப்பம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து அதிகாலையில் சுவாமிகள், அலங்கரிக்கப்பட்டு வாகனங்களில் மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர், ஆற்றில் நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில் கடலூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள், குடும்பத்துடன் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். கொரோனா நோய் தொற்று காரணமாக கடலூரில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆற்று திருவிழா நடைபெறவில்லை. தற்போது கொரோனா தொற்று விலகிய நிலையில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக நடந்து வருகிறது.
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் 24 இடங்களில் இன்று ஆற்று திருவிழா நடைபெற்றது. இதில் திரளான மக்கள் கலந்து கொண்டு தீர்த்தவாரிக்கு வந்திருந்த சாமிகளை வழிபட்டனர். மேலும் ஏராளமான சிறு கடைகளும் அமைக்கப்பட்டிருந்தன. போலீசாரும் அதிகளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.