35 பயணிகளை கழற்றி விட்டு புறப்பட்ட விமானம் – விசாரணைக்கு டிஜிசிஏ உத்தரவு!

ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் குறித்து விசாரணை நடத்த விமான போக்குவரத்து இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்பே 35 பயணிகளை விட்டு விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது.

அமிர்தசரஸ் விமான நிலையத்திலிருந்து நேற்று இரவு 7.55 மணிக்கு புறப்படவிருந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம், பல மணி நேரம் முன்னதாக மாலை 3 மணிக்கு புறப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் விமான நிலையத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தங்கள் புகாரை பதிவு செய்தனர்.

இது தொடர்பாக விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து மின்னஞ்சல் மூலம் பயணிகளுக்கு தகவல் அளித்ததாக தெரிவித்தனர். ஒரு குழுவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களுக்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த முகவர் ஒருவர் விமான நேர மாற்றம் குறித்து அந்த பயணிகளுக்கு தெரிவிக்கவில்லை என்றும் மாற்றப்பட்ட நேரத்திற்கு விமான நிலையத்திற்கு வந்த பயணிகளுடன் விமானம் புறப்பட்டுச் சென்றதாகவும் விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஸ்கூட் ஏர்லைன்ஸ் மற்றும் அமிர்தசரஸ் விமான நிலையம் விளக்கம் அளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரிகள் கூறுகையில், “பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு மன்னிப்பு கோருகிறோம். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான உதவிகளை வழங்க தற்போது பணியாற்றி வருகிறோம்,” என்றனர்.

மிர்தசரஸ் விமான நிலையத்தின் இயக்குனர் வி.கே சேத் கூறுகையில், “அனைத்து முகவர்களும் தங்களது பயணிகளிடம் விமானம் புறப்படும் நேரம் மாற்றப்பட்டது குறித்து தெரிவித்து விட்டனர். ஒரு முகவர் மட்டும் தகவல் தெரிவிக்காததால் இது போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது,” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.