ஈரோடு சட்டமன்ற தொகுதி கடந்த 2008 ஆம் ஆண்டு மறு சீரமைப்பில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு என பிரிக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு தொகுதியில் கடந்த 2011 ஆம் ஆண்டு அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்ட வி.சி. சந்திரகுமார் வெற்றி பெற்று கிழக்கு தொகுதியின் முதல் எம்.எல்.ஏ ஆனார்.
அதனை தொடர்ந்து கடந்த 2016 ஆம் ஆண்டில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.தென்னரசும், 2021 ஆம் ஆண்டு தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட திருமகன் ஈவெராவும் வென்று எம்.எல்.ஏ.க்கள் ஆகினர். இந்த நிலையில் கடந்த 4 ஆம் தேதி மாரடைப்பால் திருமகன் ஈவெரா திடீரென மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 52 இடங்களில் 238 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 10 ஆயிரத்து 713 பேரும், பெண் வாக்காளர்கள் 1 லட்சத்து 16 ஆயிரத்து 440 பேரும் உள்ளனர். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிக அளவில் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 23 பேரும், 22 ராணுவ வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 26 ஆயிரத்து 898 வாக்காளர்கள் உள்ளனர்.
மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளில் 37 வார்டுகள் ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ளன. எனவே ஈரோடு கிழக்கு தொகுதியில் வெற்றியை நிர்ணயிக்கும் முக்கிய பங்காக பெண் வாக்காளர்கள் உள்ளனர். இதன் காரணமாக கட்சியினர் பலர் பெண் வாக்காளர்களை கவரும் விதத்திலும் தங்களுக்கு சாதகமாக ஓட்டுகளை பதிவு செய்யும் விதத்திலும் பெண் வாக்காளர்களின் ஆதரவை திரட்ட திட்டம் தீட்டி உள்ளதாக தெரிகிறது.