டெல்லியில் புத்தாண்டு தினத்தன்று அதிகாலையில் கார் மோதி பெண் ஒருவர் 13 கிலோமீட்டர் இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம், தேசிய தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியது. அதையடுத்து, டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் சுவாதி மாலிவால், டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்ய எய்ம்ஸ் மருத்துவமனை அருகே நேற்று அதிகாலை 3 மணியளவில் தனியாக நடந்துசென்றிருக்கிறார்.
அப்போது அந்த வழியே காரில் வந்த நபர் குடிபோதையில், சுவாதி மாலிவாலை காரில் ஏறுமாறு வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு மறுப்பு தெரிவித்த ஸ்வாதி மாலிவால் அந்த நபரைப் பிடித்தபோது, அந்த நபர் கார் கண்ணாடியைப் பூட்டி சுமார் 15 மீட்டர் இழுத்துச்செல்ல, ஸ்வாதி மாலிவால் தன்னை விடுவித்துக்கொண்டார்.
அதன் பிறகு இது குறித்து போலீஸிடம் சுவாதி மாலிவால் புகாரளிக்க, ஹரிஷ் சந்திரா என்று அடையாளம் காணப்பட்ட அந்த நபர் கைதுசெய்யப்பட்டார். இந்த நிலையில், சுவாதி மாலிவால் தனக்கு நேர்ந்ததை விவரித்து டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கேள்வியெழுப்பியிருக்கிறார்.
இது குறித்து சுவாதி மாலிவால் தன் ட்விட்டர் பக்கத்தில், “நேற்றிரவு டெல்லியில் பெண்கள் பாதுகாப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது ஒரு கார் ஓட்டுநர் குடிபோதையில் என்னை பாலியல்ரீதியாகத் துன்புறுத்தினார். அவரை நான் பிடித்தபோது கார் கண்ணாடியில் என் கையைப் பூட்டி என்னை இழுத்துச் சென்றார். நல்லவேளை கடவுள் என் உயிரைக் காப்பாற்றினார். டெல்லியில் மகளிர் ஆணையத் தலைவியே பாதுகாப்பாக இல்லையென்றால், நிலைமை என்ன என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்” எனப் பதிவிட்டிருந்தார்.
சுவாதி மாலிவாலின் பதிவுக்கு ட்விட்டரில் பதிலளித்திருக்கும் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “டெல்லியில் சட்டம் – ஒழுங்கு என்ன ஆனது… மகளிர் ஆணையத் தலைவிக்குக்கூட பாதுகாப்பு இல்லை என்ற அளவுக்கு குண்டர்களின் மனஉறுதி அதிகரித்திருக்கிறது. அரசமைப்புச் சட்டத்தில் லெப்டினன்ட் கவர்னருக்கு மட்டுமே இந்தப் பணி வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, லெப்டினன்ட் கவர்னர் சில நாள்கள் அரசியலிலிருந்து விலகி சட்டம் – ஒழுங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.