சென்னை: தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
மின் நுகர்வோர் அனைவரும், தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என கடந்த அக்டோபர் 6-ம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவ.28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வந்தனர்.
இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடைபெற்றது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது. மேலும் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் https://adhar.tnebltd.org/Aadhaar/ என்ற புதிய இணையதள முகவரி அறிமுகம் செய்யப்பட்டது.
முதலில் டிசம்பர் 31-ம் கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இதற்கான கால அவகாசம் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “தமிழக மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், முதல்வரின் வழிகாட்டுதலின்படி துவங்கப்பட்ட, மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று மதியம் வரை 2 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. இணைத்த மின் நுகர்வோர்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். இதுவரை மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் ஜனவரி 31-க்குள் இணைத்திட வேண்டுகிறேன்.” இவ்வாறு அந்தப் பதவில் கூறியுள்ளார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தை மேம்படுத்தவும், நவீனப்படுத்தவும், துவங்கப்பட்ட மின் இணைப்புடன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில், இன்று மதியம் வரை 2 கோடி இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன. (1/2)
— V.Senthilbalaji (@V_Senthilbalaji) January 19, 2023