சென்னை: மெரினா கடற்கரையில் பொங்கல் பண்டிகை காலங்களில் தடுப்புகளை அமைப்பதற்கான பணிகளை மேற்கொள்ள பொங்கல் முடிந்த பிறகு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது. இது சர்ச்சையானதைத் தொடர்ந்து நிர்வாகக் காரணம் என்று டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டது.
தமிழகத்தில் போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கலை தொடர்ந்து காணும் பொங்கல் பொதுமக்கள் பல்வேறு இடங்களுக்கு சென்று உற்சாகத்துடன் கொண்டாடடுவார்கள். பலரும் குடும்பத்துடன் கடற்கரை, பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு தலங்களுக்கு சென்று மகிழ்ச்சியுடன் காணும் பொங்கலை கொண்டுவார்கள். குறிப்பாக சென்னை, மெரினா கடற்கரையில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும். திரும்பிய பக்கமெல்லாம் மக்கள் கூட்டம் இருக்கும்.
இந்த நேரங்களில் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக கடலில் குளிக்க தடை விதிக்கப்படும். கடல் பகுதிக்கு செல்ல முடியாதபடி, கடற்கரை நெடுகிலும் 10 அடிக்கு முன்பு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தடுப்புகள் அமைக்கும் பணியை சென்னை மாநகராட்சி மேற்கொள்ளும்.
இந்நிலையில், இந்த ஆண்டு காணும் பொங்கல் கடந்த 17-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக, சென்னை மெரினா கடற்கரையில் கடல் பகுதிக்கு செல்ல முடியாதபடி, கடற்கரை நெடுகிலும் 10 அடிக்கு முன்பு மரக்கட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில், கடந்த 18-ம் தேதி சென்னை மாநகராட்சி டெண்டர் ஒன்றை கோரி இருந்தது. இதில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களின் பாதுகாப்பு காரணங்களுக்கு மெரினா கடற்கரையில் தடுப்புகள் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று டெண்டரில் கூறப்பட்டு இருந்தது. இதன் பணியின் மதிப்பாக ரூ.9.89 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. மேலும், இந்த டெண்டர் 20-ம் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில், காணும் பொங்கல் முடிந்த பிறகு பணிகளை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி டெண்டர் கோரியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. இதனைத் தொடர்ந்து நிர்வாகல் காரணம் என்று இன்று (ஜன.19) டெண்டரை ரத்து செய்து சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.