ஆர்எஸ்எஸ், பாஜவால் நாட்டில் அச்சம் நிறைந்த சூழல்: ராகுல்காந்தி குற்றச்சாட்டு

பதன்கோட்: பாஜ, ஆர்எஸ்எஸ் ஆகியவை நாட்டில் அச்சம் நிறைந்த சூழலை உருவாக்குவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார். ஒற்றுமை யாத்திரை நடத்தி வரும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி பஞ்சாப் மாநிலம் பதான்கோட்டில் நேற்று பேசுகையில், ‘‘ஒரு மதத்துக்கு எதிராக மற்றொன்றையும், ஒரு சாதிக்கு எதிராக  மற்றொரு சாதியையும், ஒரு மொழிக்கு எதிராக மற்றொரு மொழியையும் பாஜ போராட வைக்கின்றது. அவர்கள் அச்சத்தை உருவாக்குகின்றனர். அவர்களது திட்டங்கள் அனைத்தும் யாருக்கோ அல்லது ஏதோ ஒரு பயத்தை உருவாக்குகிறது. நாம் என்ன செய்தாலும் அது பயத்தை அகற்ற வேண்டும். அவர்கள் என்ன செய்தாலும் அது அச்சத்தை பரப்புவதற்காக தான் இருக்கும்.

3 வேளாண் சட்டங்கள் கொண்டு வந்து அரசு ரத்து செய்துள்ளது அவர்களுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. விவசாயிகளின் பயிர்சேதத்திற்கு இழப்பீடு கிடைக்கவில்லை. ஒன்றிய அரசு கொண்டுவந்த அக்னிவீர் திட்டம், லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவத்தில் சேரும் கனவை சிதைத்துவிட்டது” என்றார். காஷ்மீருக்குள் நுழைந்தது யாத்திரை: ராகுல் காந்தி நேற்று  பஞ்சாப்பில் இருந்து காஷ்மீரின்  லக்கன்பூருக்கு சென்றார். இன்று காலை கதுவாவின் ஹட்லி மோரில் இருந்து அவர் புறப்படுகிறார். வரும் 25 ம் தேதி பனிஹாலில் ராகுல் காந்தி தேசியக் கொடியை ஏற்றுகிறார்.  பிறகு  27 ம் தேதி அனந்தநாக் வழியாக நகருக்கு செல்கிறார்.  30ம் தேதி நகரில்  பிரமாண்ட பொதுக்கூட்டத்துடன் யாத்திரை நிறைவடைகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.