மதுரை: குடிநீரில் மனிதக்கழிவை கலந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு, 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 149 பேரிடம் சாட்சிய விசாரணை நடந்துள்ளதாகவும் ஐகோர்ட் மதுரை கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே திருமணஞ்சேரியைச் சேர்ந்த சண்முகம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், புதுக்கோட்டை மாவட்ட கிராமங்களில் பின்பற்றப்படும் தீண்டாமை குறித்து குழு அமைத்து ஆய்வு செய்யவும், இக்குழுவின் ஆய்வு அறிக்கைப்படி உரிய நடவடிக்கை எடுக்கவும், மனிதக் கழிவு கலந்த குடிநீரை குடித்து பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் அழகுமணி ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட கிராமம் மட்டுமின்றி, புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 49க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீண்டாமை பின்பற்றப்படுகிறது. 29 கிராமங்களில் உள்ள டீக்கடைகளில் இரட்டை டம்ளர் முறை இன்னும் உள்ளது. பல கிராமங்களில் உள்ள குளங்களில் குளிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. இதை அரசுத் தரப்பில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். அரசு பிளீடர் திலக்குமார், அரசு கூடுதல் வக்கீல் செந்தில்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘‘குடிநீரில் மனிதக் கழிவை கலந்தது, தீண்டாமை பின்பற்றியது, கோயிலில் அனுமதிக்க மறுத்தது தொடர்பாக இதுவரை 3 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளனூர் போலீசில் இருந்து இந்த வழக்கின் விசாரணை தற்போது சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
சிபிசிஐடி புதுக்கோட்டை டிஎஸ்பி விசாரிக்கிறார். இந்த விவகாரங்கள் தொடர்பாக 114 சாட்சிகளிடம் போலீசார் விசாரித்திருந்தனர். தற்போது சிபிசிஐடி தரப்பில் கூடுதலாக 35 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் மனிதக் கழிவை கலந்தவர்களை கண்டறிவது தொடர்பாக சிபிசிஐடியில் 10 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் சமூகம் சார்ந்த தேவையற்ற பிரச்னை ஏற்படாத வகையில் தொடர் விசாரணை நடக்கிறது. தீண்டாமை மற்றும் இரட்டை டம்ளர் முறை குறித்து புகார்கள் பெறப்பட்டால், எந்த தயக்கமும் இன்றி உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும்’’ என்றனர். இதையடுத்து நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அரசுத் தரப்பில் மேற்ெகாள்ளப்பட்ட நடவடிக்கை தொடர்பான நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை பிப். 2க்கு தள்ளி வைத்தனர்.