சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தான் நிற்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றவர் திருமகன் ஈவெரா. கடந்த 4-ம் தேதி திருமகன் ஈவெரா மாரடைப்பால் காலமானார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், மேகாலயா உள்ளிட்ட 3 மாநிலத் தேர்தலுடன், 6 மாநிலங்களில் காலியாக உள்ள, ஈரோடு கிழக்கு தொகுதி உள்ளிட்ட7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதியையும் இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. அதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப். 27-ல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக சார்பில் கூட்டணி கட்சிகளிடம் ஆலோசனை நடத்தப்பட்டுவருகிறது.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சி தான் நிற்கும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,” இடைத்தேர்தலில் காங்கிரஸ் தான் நிற்கும். காங்கிரஸ் தான் நிற்கும். இது எங்களுடைய தொகுதி. நாங்கள் நின்ற தொகுதி. வென்ற தொகுதி. நாங்கள் எங்களின் கூட்டணி கட்சிகளான திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் எங்களுக்கும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்க உள்ளோம். இன்று மாலை அனைத்து தலைவர்களையும் சந்திக்க உள்ளோம். எனவே காங்கிரஸ் தான் நிற்கும்.” இவ்வாறு அவர் கூறினார்.