புதுடெல்லி: ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஆலோசனை நடந்து வருவதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்தியா-இலங்கை இடையிலான கடல் பகுதியில் இருக்கும் ராமர் பாலத்தை தேசிய பிரதான சின்னமாக அறிவிக்கக்கோரி கடந்த 2015ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் சுப்ரமணியசுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்த ஒன்றிய அரசு, சேது சமுத்திர திட்டத்தின் போது ராமர் பாலம் அகற்றப்படாது என உறுதியளித்து கடந்தாண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, ‘‘ராமர் பாலத்தை தேசிய பாரம்பரிய சின்னமாக அறிவிப்பது குறித்து ஒன்றிய கலாசார துறை கவனமாக பரிசீலித்து வருகிறது. வேண்டுமானால் மனுதாரர் கூடுதல் ஆவணங்களை கோரிக்கையாக உரிய அமைப்பு முன்பு கொடுக்கலாம்’’ என தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட சுப்ரமணியசுவாமி,‘‘ இந்த விவகாரத்தை வேண்டுமென்றே ஒன்றிய அரசு இழுத்தடித்து வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக எந்த அமைச்சரையோ அல்லது அதிகாரிகளையோ பார்க்க விரும்பவில்லை.
ஏனெனில் பாஜ.வின் தேர்தல் அறிக்கையில் இந்த விவகாரம் இடம்பெற்றுள்ளது. அதனால் இதுதொடர்பான பிரச்னையை முன்னதாக உச்ச நீதிமன்றம் வழங்கிய ஆறு வார காலத்திற்குள் ஒன்றிய அரசு முடிக்க வேண்டும். அதில் ஏதேனும் குழப்பம் ஏற்படும் பட்சத்தில் மீண்டும் நீதிமன்றத்தை நாடுவேன்,’’ என தெரிவித்தார். இதையடுத்து, `இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் வாதங்களை நீதிமன்றம் பதிவு செய்கிறது. அதனால் ராமர் பாலத்தை தேசிய பிரதான சின்னமாக அறிவிக்க கோரி சுப்பிரமணியசுவாமி தொடர்ந்த மனு உட்பட அனைத்து இடைக்கால மனுக்களும் தற்போதைக்கு முடித்து வைக்கப்படுகிறது.
மேலும், மனுதாரர்கள் சம்பந்தப்பட்ட ஒன்றிய கலாசார அமைச்சகத்திற்கு சென்று கோரிக்கை கடிதத்தை வழங்கலாம். இருப்பினும், எதிர்காலத்தில் மனுதாரர்களுக்கு ஏதேனும் நிவாரணம் தேவைப்படும் பட்சத்தில் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம்,’ என தெரிவித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், மேலும் ராமர் பாலம் விவகாரத்தில் என்னென்ன செயல்முறை மற்றும் நடவடிக்கைகள் தற்போது வரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது தொடர்பான நிலை அறிக்கையை ஒன்றிய அரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.