நீடாமங்கலம்: ‘காலை உணவு திட்டத்தை 17 லட்சம் குழந்தைகளுக்கு கொண்டு செல்ல முதல்வர் நடவடிக்கை மேற்ெகாண்டுள்ளார்’ என அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பசுமை பள்ளித்திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: பள்ளிகளில் இயற்கையான முறையில் வளர்க்கப்படும் சத்தான காய்கறிகளை சத்துணவுக்கு பயன்படுத்துவது என்ற நோக்கத்தில் கலைஞர் பிறந்த மாவட்டத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்டுள்ளது.
தற்போது ஒன்று முதல் ஐந்து வகுப்பு வரை ஒரு லட்சத்து 16 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது. அடுத்தக்கட்டமாக, 17 லட்சம் குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தை கொண்டு செல்ல முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். தமிழ்நாட்டில் பழுதடைந்துள்ள 3,030 பள்ளிகளில் 1,840 பள்ளிகள் இடிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளாக இடைநின்ற 2 லட்சம் மாணவர்களை பள்ளியில் சேர்த்துள்ளோம். பள்ளிக்கு வராத மாணவர்களை கண்டு பிடித்து மீண்டும் பள்ளியில் சேர்க்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.