கொச்சி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து இன்று கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. பக்தர்கள் ரூ.310.40 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.
இந்நிலையில் நன்கொடை பொட்டலங்களில் உள்ள பணத்தை எண்ணாததால், அதில் உள்ள கரன்சி நோட்டுகள் அழுக்காகி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக செய்தி வெளியானது. இந்த விவகாரத்தை கேரள உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனில் கே. நரேந்திரன், பி.ஜி. அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு நேற்று விசாரித்தது. நன்கொடை பொட்டலங்கள் மற்றும் கரன்சி நோட்டுகளை எண்ணுவதில் ஏதேனும் குளறுபடிகள் உள்ளதா என்பதைக் கண்டறிய திருவிதாங்கூர் தேவஸ்வம் வாரியத்தின் விஜிலென்ஸ் பிரிவுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.