புதுடில்லி : ஓர் பாலின ஈர்ப்பாளர் என்ற காரணத்துக்காக, மூத்த வழக்கறிஞர் சவுரவ் கிர்பாலுக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பதவி மறுக்கப்பட்டதை உச்ச நீதிமன்றம் பொது வெளியில் பகிர்ந்து, அதற்கு பதில் அளித்துள்ளது.
மூத்த வழக்கறிஞர் சவுரவ் கிர்பாலை டில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், வழக்கறிஞர் சோமசேகர் சுந்தரேசனை மும்பை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், ஆர்.ஜான் சத்தியனை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்க உச்ச நீதிமன்ற, ‘கொலீஜியம்’ கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது.
இந்த மூவரது பரிந்துரையை ஏற்க மத்திய அரசு கடந்த நவ., மாதம் மறுத்துவிட்டது. இதற்கு, மத்திய அரசு பல்வேறு காரணங்களை தெரிவித்தது. பொதுவாக இந்த காரணங்களை கொலீஜியம் வெளியே பகிராமல் ரகசியம் காக்கும்.
கொலீஜியத்தின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்காமல் திருப்பி அனுப்பினாலும், அது இரண்டாவது முறையாக அதே பெயர்களை பரிந்துரைத்தால், அரசு ஏற்றுத்தான் ஆக வேண்டும்.
இந்நிலையில், மூவரது பெயர்கள் நிராகரிக்கப்பட்டதை கொலீஜியம் ஏற்க மறுத்து நேற்று மீண்டும் இரண்டாவது முறையாக பரிந்துரை செய்தது. மேலும், அவர்களது பெயர்களை நிராகரிக்க மத்திய அரசு தெரிவித்துள்ள காரணங்களை கொலீஜியம் ஏற்க மறுத்து, அதை உச்ச நீதிமன்ற இணைதளத்தில் கடிதமாகவும் வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் நிராகரிப்புக்கு பதிலும் அளித்துள்ளது.
நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும், நீதித்துறைக்கும் இடையே கடந்த சில மாதங்களாக நிலவி வரும் மோதல் போக்குகாரணமாக, வழக்கத்துக்கு மாறான இந்த நடவடிக்கையில் கொலீஜியம் இறங்கியுள்ளது.
குறிப்பாக, மூத்த வழக்கறிஞர் சவுரவ் கிர்பால், ஓர் பாலின ஈர்ப்பாளர் என்பதை பொது வெளியில் அவரே ஒப்புக் கொண்டுள்ளார். அவரது பெயர் நிராகரிக்கப்பட்டதற்கு இதை முக்கிய காரணமாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும், அவரது துணை ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் என்பதும் நிராகரிப்புக்கான கூடுதல் காரணமாக கூறப்படுள்ளது.
கொலீஜியம், இதை ஏற்க மறுத்துள்ளது. ‘சவுரவ் கிர்பால் தன் பாலின ஈர்ப்பு குறித்து வெளிப்படையாகவே பகிர்ந்துள்ளார். நீதிபதி பதவிக்கு அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளதை அறிந்து அதை அவர் மறைக்க முயற்சிக்கவில்லை. இந்த வகையில் அவரது பரிந்துரையை நிராகரிப்பது, உச்ச நீதிமன்றம் வகுத்துள்ள அரசியலமைப்பு கொள்கைகளுக்கு முரணானது’ என, அந்த கடிதத்தில் கொலீஜியம் தெரிவித்துள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement