தூத்துக்குடி: நடுக்கடலில் நாட்டுபடகு, சரக்கு கப்பல் மோதி விபத்து – நடந்தது என்ன?!

தூத்துக்குடி கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ரியாஸ் என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில், திரேஸ்புரத்தைச் சேர்ந்த சேக் முகமது, ஜெயபால், அண்டோ ஆகியோர் கடந்த 17-ம் தேதி திரேஸ்புரத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் 18-ம் தேதி காலை சுமார் 9 மணியளவில் காயல்பட்டினம் கொம்புதுறை கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 35 கடல்மைல் தொலைவில் படகில் மீன்பிடித்துக் கொண்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. பின்னர் மீன்பிடித்துவிட்டு கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது எதிரே கன்டெய்னர் பெட்டிகள் ஏற்றி வந்த கப்பல் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

ஷேக் முகமது

இதில், நாட்டுப்படகு உடைந்துள்ளது. படகிலிருந்த 3 மீனவர்கள் தூக்கி வீசப்பட்டிருக்கின்றனர். படகும் கடலில் மூழ்கியுள்ளது. நாட்டுப்படகின் உடைந்த பாகங்களை பிடித்தவாறே கடலில் தத்தளித்திருக்கின்றனர். பின்னர் கொம்புதுறையிலிருந்து மீன் பிடிக்கச் சென்ற ரிச்சர்டு என்பவர் கடலில் தத்தளித்த ஜெயபால், ஆண்டோ ஆகிய இருவரை மீட்டார். சேக் முகமதை தேடிப் பார்த்தும் அவரைக் காணவில்லை என்பதால், மீட்கப்பட்ட 2 மீனவர்களும் கரைக்கு அழைத்துவரப்பட்டனர்.

பின்னர், அவர்கள் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் தருவைகுளம் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார், மீட்கப்பட்ட 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். இது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீஸாரிடம் விசாரித்தோம். “குறிப்பிட்ட நேரத்தில் அந்தப் பகுதியில் ஏதேனும் கப்பல் வந்திருக்கிறதா… அப்படி வந்திருந்தால் அந்த கப்பல் எங்கு சென்றது உள்ளிட்ட விவரங்களை சேகரித்து வருகிறோம். கடலில் மாயமான சேக் முகமதுவை தேடும்பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது” என்றனர்.

சிகிச்சை பெற்று வரும் மீனவர்கள்

தூத்துக்குடி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்கள் சங்கத் தலைவர் கயஸ் நம்மிடம் பேசுகையில், “படகு விபத்துக்குள்ளானதில் மீனவர் ஷேக் முகமதின் விலா எலும்பு முறிந்துவிட்டது. அவர் காயமடைந்த நிலையில், கடலில் துடிதுடித்து மூழ்கியதாக மற்ற இரண்டு மீனவர்களும் சொல்கிறார்கள். விதிமுறைகளை மீறிச் சென்ற கப்பலை சிறைபிடித்து, அரசு பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும். மூழ்கிய நாட்டுப் படகிற்கு இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.