புதுடெல்லி: மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சிக்கிய பாஜ எம்பி பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் மீது விசாரணை நடத்த 7 பேர் குழுவை குழு ஒன்றை இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜ எம்பியுமான பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் மற்றும் தலைமை பயிற்சியாளர் பாலியல் தொல்லை கொடுத்ததாக காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் சில நாட்களுக்கு முன் குற்றம் சாட்டினார். அவர்கள் பதவி விலககோரி வினேஷ் போகத் மற்றும் சக மல்யுத்த வீராங்கனைகள் மற்றும் வீரர்கள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போராட்டம் நடத்திய வீரர்களை ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் நேற்றுமுன்தினம் இரவு சந்தித்து பேசினார். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வீரர்கள், பிரிட்ஜ் பூஷன் சரண் சிங் பதவியிலிருருந்து விலக வேண்டும் என்பதை தவிர வேறு எந்தவித சமரசத்திற்கும் நாங்கள் இறங்கிவர தயாராக இல்லை என உறுபதிபட தெரிவித்துள்ளனர். இதனால் 3வது நாளான நேற்று போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனிடையே, இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷாவுக்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் புகார் கடிதம் ஒன்றை எழுதி உள்ளனர்.
இதைதொடர்ந்து மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் பற்றி இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் நேற்று மாலை அவசரமாக கூடி விவாதித்தனர். இந்த கூட்டத்தில் பாலியல் புகார் பற்றி விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இது பற்றிய அறிவிப்பை இந்திய ஒலிம்பிக் சங்கம் நேற்று இரவு வெளியிட்டது. புகாரில் சிக்கிய பாஜ எம்பி பிரிட்ஜ் பூஷன் சரண் சிங், தன் மீதான அனைத்து புகார்களையும் மறுத்துள்ளார். இதுபற்றி நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சிங், ‘‘நான் பேச ஆரம்பித்தால் சுனாமியே வரும். யாரோ ஒருவருக்கு மட்டும் தொண்டு செய்வதற்காக நான் இங்கு வரவில்லை” என்றார்.