கத்துவா(ஜம்மு காஷ்மீர்): ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் உள்ள ஹிராநகர் பகுதியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் தொடங்கியது.
காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் இறுதி கட்டமான காஷ்மீர் பகுதியில் நடந்து வருகிறது. முன்னதாக யாத்திரை கத்துவாவின் லக்னாபூர் பகுதியில் வியாழக்கிழமை மாலை நுழைந்தது.
இதற்கிடையில் ஜம்மு அருகிலுள்ள நர்வால் பகுதியில் அடுத்தடுத்து 2 இடங்களில் சனிக்கிழமை காலை சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்தன. சாலையோரத்தில் புதைக்கப்பட்டு இருந்த நிலையில் இந்த குண்டுகள் வெடித்துள்ளன. இதில் 9 பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்தநிலையில் இந்திய ஒற்றுமை யாத்திரை அதன் திட்டப்படி, கத்துவாவின் ஹிராநகர் பகுதியில் இருந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் மீண்டும் தொடங்கியது. இதுகுறித்து ஜம்மு காஷ்மீர் பிரதேச காங்கிரஸ் கமிட்டி செய்தி தொடர்பாளர் ரவிந்தர் சர்மா சனிக்கிழமை கூறியதாவது: “இந்திய ஒற்றுமை யாத்திரையில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கெனவே திட்டமிட்ட படி, யாத்திரை ஹிராநகர் பகுதியில் இருந்து தொடங்கும். ஜம்மு நகருக்கு அருகில் நடந்துள்ள இரட்டை குண்டு வெடிப்பு சம்பவம் நிச்சமயாக கவலைக்குரிய விஷயம் தான். இந்த குண்டுவெடிப்புகள் ஜம்முவில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்ற அரசாங்கத்தின் கூற்று பொய் என்பதை நிரூபித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மதியம் ஜம்மு காஷ்மீர் பகுதி காங்கிரஸ் பொறுப்பாளர் ரஜ்னி பாட்டீல், ஜம்முகாஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் வாணி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்திப்பார்கள். ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை இரவு சம்பா பகுதியில் உள்ள சாக்நாக்-ல் தங்குகிறார். தொடர்ந்து ஜன.23 திங்கள்கிழமை சம்பா பகுதியில் இருந்து தனது யாத்திரையை மீண்டும் தொடங்கி சத்வாரி சவுக் நோக்கி செல்கிறார். அங்கு பேரணி ஒன்றில் பங்கேங்கிறார். அடுத்தநாள் ஜம்முவில் செய்தியாளர்களைத் சந்திக்கிறார்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை யாத்திரை கடந்த ஆண்டு செப்.7ம் தேதி தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து யாத்திரை கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, டெல்லி, பஞ்சாப், ஹரியாணா என பல மாநிலங்களில் வழியாக யாத்திரையின் இறுதி இலக்கான ஜம்முவை அடைந்துள்ளது. ஜன.30 ம் தேதி ஜம்முவின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது.