தமிழக சட்டப்பேரவையில் `கால்நடை பராமரிப்புத் துறையின் மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்ற போது, வள்ளலார் 200-வது பிறந்த நாளை முன்னிட்டு ஆதரவில்லாத, கைவிடப்பட்ட, காயமடைந்த வளர்ப்பு பிராணிகள் மற்றும் பல்வேறு விலங்குகளை பராமரிக்கும் அரசுசாரா நிறுவனங்கள், சேவை நிறுவனங்களுக்கு உதவி அளிப்பதற்கு ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ ரூ.20 கோடி செலவில் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கடந்த திங்கள் கிழமை அன்று கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், ‘வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்’ என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பிராணிகள் துயர் துடைப்பு சங்கம், பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் விலங்குகள் நல அமைப்புகளுக்கு முதல் தவணை நிதியுதவியாக 88 இலட்சத்து 5 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை முதல்வர் வழங்கினார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
கால்நடைகள்/வளர்ப்பு பிராணிகள் உயிர் வாழ்வதற்கு அவற்றின் உரிமையாளர்களை சார்ந்துள்ளது. இந்நிலையில் பல்வேறு காரணங்களால் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட விலங்குகள் தாங்களே தற்காத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளன.
இந்த விலங்குகள் உணவு மற்றும் தங்குமிடம் தேடி அலையும் போது, உடலில் காயங்கள் மற்றும் பாதுகாப்பற்ற/ கெட்டுப்போன உணவை உட்கொள்ளும்போது தொற்றுநோய்கள் போன்ற பல்வேறு உடல்நலக் குறைபாடுகளுக்கு உட்படுகின்றன. இவ்வாறு ஆதரவில்லாமல் தெருவில் சுற்றி திரியும் விலங்குகளுக்கு உணவு, மருத்துவ சிகிச்சை, உறைவிடம் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கபடுகிறது.
பிராணிகள் துயர் துடைப்பு சங்கம் (SPCA), விலங்குகள் நல அமைப்புகள் (AWOs) பிராணிகள் நலன் தொடர்பான அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு (NGOs) மருத்துவ அவசர சிகிச்சை ஊர்தி (ஆம்புலன்ஸ்) வாங்க தேவையான நிதியுதவி அளிக்கப்படும், அத்துடன் தெரு நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த கருத்தடை அறுவை சிகிச்சையும், வெறிநோய் தடுப்பூசி செலுத்துவதற்கு நிதியுதவி அளிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
இத்திட்டம் குறித்து சமூக ஆர்வலரான தேசிய நல்லாசிரியர் செல்லப்பாவிடம் கேட்டோம். அவர்கூறுகையில், “இந்த திட்டம் உண்மையில் வரவேற்புக்குரியது. ஆனால் வெறும் பெயரளவில் இல்லாமல் உண்மையாக நடைமுறையில் செயல்பட வேண்டும். தமிழகத்தில் இப்போது ஆதரவின்றி தெருக்களில் திரியும் பிராணி என்றால் அது தெரு நாய்தான். அதுதான் முக்கிய பிரச்னையாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் நாய்கடியால் பாதிக்கப்படும் அபாயம் அதிகம் உள்ளது. அத்துடன் மாநகரங்கள் முதல் கிராமங்கள் வரை தெருக்களில் நோயோடு திரியும் நாய்களை பார்க்கவே பயமாக உள்ளது. தெருக்களில் ஆதரவின்றி திரியும் நாய்களை பிடித்து அதை சரியான உறைவிடத்தில் பாதுகாத்து கட்டுக்குள் வைத்தாலே போதும் இந்த திட்டத்தின் நோக்கம் வெற்றி பெற்றதாகிவிடும். அடுத்தபடியாக ஆடு, மாடுகள் தான் சாலைகளில் திரியும் அதை அதன் உரிமையாளர்கள் எப்படியாவது தேடு பிடித்து அழைத்துச் சென்று விடுவதால் அதனால் பெரிய பாதிப்பு இல்லை” என்றார்.
விலங்குகள் நல ஆர்வலர் சாய் விக்னேஷ் இதுகுறித்து கூறுகையில், “அரசு அறிவித்துள்ள இத்திட்டத்தின் படி, தெருவில் சுற்றித்திரியும் நாய்களுக்கு நோய்க்கான தடுப்பூசியும், கருத்தடை சிகிச்சையும் செய்யப்படும் என்பதால் தெருநாய்கள் குறித்த அச்சம் குறையும். அத்துடன் அவற்றை பாதுகாக்க காப்பகம் அமைக்கப்படுகிறது. பெருநகரங்களை பொறுத்தவரை சாலைகளில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொள்கிறது, சில சமயங்களில் விபத்துக்குள்ளாகிறது. அடிபட்டு சாலையில் திரியும்போது அதை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சை செய்ய இந்த திட்டம் உதவுகிறது. அத்துடன் உரிமையாளர் யார் என்று தெரியாமல், வயது முதிர்ந்த மற்றும் நோயுற்ற கால்நடைகள் பல ஆதரவில்லாமல் சாலைகளில் சுற்றித் திரிகின்றன. அவற்றை மீட்டு காப்பகத்தில் சேர்க்க முடியும்” என்றார்.