சென்னை: கோயம்பேட்டிலிருந்து வடக்கு நோக்கி இயக்கப்படும் அனைத்து பேருந்துகளையும் மாதவரத்தில் இருந்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கோயம்பேட்டில் ஏற்படும் வாகன நெரிசலைகுறைக்கும் வகையில், சென்னையிலிருந்து வடக்கு நோக்கி ஆந்திரா, திருப்பதி மற்றும் காளஹஸ்தி செல்லும் பேருந்துகளுக்கான தனிப் பேருந்து நிலையம் கடந்த 2018-ம் ஆண்டு மாதவரத்தில் ரூ.94.16 கோடியில் நிறுவப்பட்டது.
இப்பேருந்து நிலையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வருவது குறித்தும், சிறப்பாக பராமரிப்பது தொடர்பாகவும் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, கோயம்பேட்டிலிருந்து வடக்கு நோக்கி இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அனைத்தையும் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்க போக்குவரத்துத் துறை அமைச்சருடன் கலந்தாலோசிக்க முடிவு செய்யப்பட்டது.
தொடர்ந்து ஆந்திரப்பிரதேச போக்குவரத்துக்கழக ஊழியர்களுக்கு தங்கும் அறை போதுமானதாக இல்லாததால் கூடுதல் இடம் கொடுக்கவும், பயணிகள் தங்கும் கூடங்களை 2,4, 6 பேர் தங்கும் அறைகளாக மாற்றியமைக்கவும், பயணிகள் காத்திருக்கும் அறைகளில் இருக்கை வசதி மற்றும் தொலைக்காட்சி வசதி அமைத்துக் கொடுக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.
மேலும் மாநகர பேருந்து நிறுத்தம் உள்ள இடத்தில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதி அமைக்கவும், பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டுக்கு எல்இடி அறிவிப்பு பலகையும், நுழைவு வாயிலில் வளைவு அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.