புதுடெல்லி: தமிழகத்தில் உள்ள கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும் வழக்கில் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள கோயில் அறங்காவலர்கள் நியமன வழக்கில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில், ‘தமிழக அரசு கட்டுப்பாட்டில் உள்ள 1045 கோயில்களுக்கு அறங்காவலர் நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணி 6 மாதத்தில் முடிவடையும். அறநிலையத் துறையின் கீழ் வரும் அனைத்து கோயில்களிலும் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் தனித்தனியாக டிரஸ்ட் போர்டு அமைப்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. மேலும் இந்து கோயில்களில் அறங்காவலர்களை நியமிப்பதற்காக தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டத்தின் 47வது பிரிவில் நடைமுறைகள் உள்ளன.
கோயில்களில் அன்றாட நிகழ்வுகள் தொடருவதற்காகவும், புனரமைக்கும் பணிகளுக்காகவும், நலதிட்டங்களை நிறைவேற்றுவதற்காகவும், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ளவும், பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் உரிய நபர் நியமிக்கப்பட்டு டிரஸ்ட் போர்டில் செயல்பாட்டில் உள்ளது. அதேப்போன்று தமிழ்நாட்டில் அரசு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள 38,658 கோயில்களில் 33,956 கோயில்களின் வருமானம் ரூ.10 ஆயிரம் கீழ் உள்ளது. 3529 கோயில்களில் ரூ.10 ஆயிரம் முதல் 2 லட்சம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கிறது. 595 கோயில்களில் ரூ.2 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை ஆண்டு வருமானம் கிடைக்கிறது. 578 கோயில்களில் ரூ.10 லட்சத்துக்கு மேல் வருமானம் கிடைகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.