தமிழ்நாடு ஆளுநர் ரவி, வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வருவதாக நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், டெல்லி சென்று வந்ததிலிருந்து ஆளுநர் மாநில அரசிற்கு எதிரான போக்கை கடைபிடிக்காமல் அமைதியாக இருக்கிறார் என்று கூறியுள்ளார்.
பொங்கல் விழாவுக்காக ஆளுநர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தமிழகம் என்று இருந்தது. அதே போல் இலச்சினை மத்திய அரசுடையது இருந்தது. இந்த இரண்டு விவகாரமும் பேசு பொருளாக மாறியது.
ஆளுநர் மாளிகையின் அந்த அழைப்பிதழுக்கு பல்வேறு கட்சிகளும் கண்டனங்களை தெரிவித்தன. இதனையடுத்து திமுக எம்பி டி.ஆர்.பாலு, அமைச்சர் ரகுபதி அடங்கிய குழுவினர் ஆளுநரின் போக்கை எதிர்த்து, குடியரசு தலைவரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
அதன்பிறகு தாமதமாக ஆளுநர் தரப்பிலிருந்து விளக்க கடிதம் வெளியிடப்பட்டது. அதில் தான் தமிழகம் என குறிப்பிடலாம் என சொன்னதை தவறாக புரிந்துக்கொள்ளப்பட்டது என விளக்கமளித்தார்.
இந்நிலையில் வரும் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவிற்கு ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள தமிழ்நாடு இலச்சினை இருக்கிறது. அதே போல் தமிழகம் என்பதற்கு பதிலாக தமிழ்நாடு என அச்சடிக்கப்பட்டுள்ளது.
எனவே தான் டெல்லி சென்று வந்தபிறகு ஆளுநர் செயல்பாட்டில் மாற்றம் தெரிவதாக திருமாவளவன் கூறியுள்ளார். மேலும், ஆளுநர் ரவி, வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
newstm.in