இராணிப்பேட்டை: இராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ. 7 கோடி மதிப்பீட்டில் தக்கோலம் அழகுராஜப் பெருமாள் திருக்கோயில் புனரமைப்பு பணிகளை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை தனது நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள தொன்மை வாய்ந்த திருக்கோயில்களில் பழமை மாறாமல் திருப்பணிகள் மேற்கொள்ளுதல், குடமுழுக்கு நடத்துதல், திருக்குளங்கள் மற்றும் திருத்தேர் சீரமைத்தல், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம் அருள்மிகு மங்கள லட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் திருக்கோயிலில் இன்று கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் ரூ.7 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு திருப்பணிகளை தொடங்கி வைத்தனர்.
பின்னர் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட திருக்கோயில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்வதற்கு இந்தாண்டு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். அந்த வகையில் 1,100 ஆண்டுகளுக்கு முன்பு சோழர்களால் கட்டப்பட்ட அருள்மிகு மங்களலட்சுமி சமேத அழகுராஜப் பெருமாள் திருக்கோயிலை தொன்மை மாறாமல் புனரமைக்கும் பணி இன்று தொடங்கப்பட்டுள்ளது. முதலாம் பராந்தகச் சோழர் காலத்து கல்வெட்டு இருப்பதைக் கொண்டு தெளிவாக இதன் தொன்மையை உறுதி செய்ய முடிகிறது. இத்திருக்கோயில் இடத்தில் வசித்து வந்த 53 குடும்பங்களுக்கும் மாற்று இடம் வழங்கிட மாண்புமிகு அமைச்சர் திரு. காந்தி அவர்கள் ஏற்பாடுகளை செய்துள்ளார்.
இந்த பகுதி வாழ் மக்களுக்கு இறைவனுடைய முழு அனுகிரகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து முயற்சி எடுத்து மகா மண்டபம், கருவறை, பரிவார சன்னதிகள், கருடாழ்வார் சன்னதி, யாகசாலை, மடப்பள்ளி, வைப்பு அறை, மதில்சுவர், கட்டுமானப் பணிகளும், இராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகளும், கொடிமரம், திருக்குளத் திருப்பணி உள்ளிட்ட 11 திருப்பணிகளை ரூ.7 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பபட்டுள்ளன. இப்பணியினில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள திரு. சுனில் ரவீந்திரன் மற்றும் குடும்பத்தாரர் எல்லா வளமும் நலமும் பெற்று நல்ல உடல் ஆரோக்கியத்தோடு வாழ எம்பெருமானே வேண்டிக்கொள்கிறேன். நம் முன்னோர்கள், மன்னர்கள் உருவாக்கி தந்து சென்றுள்ள தொன்மையான திருக்கோயில்களை அதன் பழமை மாறாமல் பாதுகாப்பதற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் அமைந்திருக்கின்ற அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் தொடர்ந்து இதுபோன்ற நல்முயற்சிகளை எடுக்கும்.
தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.3,943 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இதுவரையில் மீட்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் திருக்கோயில்களுக்கு சொந்தமான சொத்துகளை அளவீடு செய்திடும் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு இதுவரையில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, HR and CE என்று பொறிக்கப்பட்ட எல்லைக் கற்கள் நடப்பட்டு வேலிகள் அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதனை பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம். நெமிலி அருகே கோயில் திருவிழாவில் மூன்று பேர் இறந்த சம்பவத்தை பொறுத்த அளவில் அது தனியார் திருக்கோயில் இருந்தாலும், பாதுகாப்பு வழிமுறைகளின்படி தான் எந்த திருக்கோயில் திருவிழா என்றாலும் நடத்தப்பட வேண்டும். இது எதிர்பாராமல் நடந்திருக்கின்ற விபத்து.
விலைமதிப்பற்ற மக்களின் உயிரை பாதுகாப்பதற்கு தான் மக்களை தேடி மருத்துவம் போன்ற எண்ணற்ற நலத்திட்டங்களை கொண்டு வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் கொண்டு வந்துள்ளார். வருங்காலங்களில் இது போன்ற விபத்துக்கள் நடக்காமல் இருக்க இந்து சமய அறநிலையத்துறையும், வருவாய்த் துறையும், காவல்துறையும் ஒருங்கிணைந்து நடவடிக்கை மேற்கொள்ளும். சர்ச்சை இருந்தால் தான் துறை சரியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அர்த்தமாகும். ஓம் என்று வருபவர்களுக்கு ஓ வை எடுத்துக் கொள்ளலாம் ஆம் என்று வருபவர்களுக்கு ஆ வை எடுத்துக் கொள்ளலாம். உயிரிழந்தவர்களுக்கு நிதி உதவி வழங்குவது குறித்து வைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முடிவு எடுப்பார்.
திரு. அண்ணாமலை அவர்களுக்கு வித்தியாசமான, ஏறுக்கு மாறான தகவல்களை அள்ளி வீசுவது தான் அவருக்குண்டான வழக்கம், வாடிக்கை. ஊடகங்களில் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக இது போன்ற விஷயங்களை அவர் முன்னெடுக்கின்றார். ஐபிஎஸ் தேர்ச்சி பெற்று, காவல்துறையில் பணியாற்றியவர் போல் அவருடைய சொல்லும், செயலும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய அறிவுறுத்தலாகும். இந்நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் திரு.ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப., இராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ பாஸ்கர பாண்டியன் இ.ஆ.ப. திருமலை திருப்பதி பெரிய கோவில் கேள்வி அப்பன் ஸ்ரீ சடகோப ராமானுஜ பெரிய ஜீயர், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் திரு. சி. லட்சுமணன், திருப்பணி உபயதாரர்கள் திரு சுனில் ரவீந்திரநாத் திருமதி பபிதா சுனில், தக்கோலம் பேரூராட்சி தலைவர் திரு நாகராஜ் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.