இடைத்தேர்தல்: `எடுத்தோம் கவிழ்த்தோம் என்றில்லாமல் விரைவில் முடிவு எடுக்கப்படும்'- அண்ணாமலை

“எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. ஆகவே கூட்டணி தர்மத்தோடு நடப்பது தான் கண்ணியம்” என திருச்சி விமான நிலையத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்..
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேட்டியளித்த அவர், “கூட்டணி என்பது, மரபு தர்மத்திற்குட்பட்டது. இடைத்தேர்தல் எல்லாம் ஒரு கட்சியின் பலம், வளர்ச்சி அளவுகோல் இல்லை. கூட்டணி தர்மத்தோடு தான் நடைபெறுவது கண்ணியமாக இருக்கும். திமுக காங்கிரஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கக் கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்க வேண்டும். அப்படியான கட்சியில் நிற்பவர், மக்கள் செல்வாக்கு பெற்றவராக மக்களின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும். ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும்.
image
இடைத்தேர்தலில் ஆளும்கட்சி பணத்தை தண்ணீரை போல் செலவிடுவார்கள். தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி 350 கோடி ரூபாயை இடைத தேர்தலில் செலவிட்டுள்ளது. இங்கோ மூன்று திமுக அமைச்சர்களின் மாவட்டம் ஈரோடு. ஆகவே பணம் அதிக அளவு செலவு செய்யப்படும் என்பது பார்க்கும் போது தெரியும்.
பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை. எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக. ஈரோட்டில் இருந்து அதிமுக சார்பாக ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள், அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர்கள் உள்ள மாவட்டம். அதிமுக விருப்ப மனுக்களை கொடுக்க தெரிவித்துள்ளது. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்தித்துள்ளார். நிற்கக்கூடிய வேட்பாளர் முழு தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும். பணபலம், படைபலம் அதிகாரிகள் பலத்தையும் திமுக தவறாக பயன்படுத்தும். அதை எதிர்க்கக்கூடிய ஒரு வேட்பாளர் நிற்க வேண்டும்.
image
பாராளுமன்றத் தேர்தல் 13 மாதங்களில் வரப்போகிறது. அதனால் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படக் கூடாது. பொறுமையாக நிதானமாக நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும். காங்கிரசின் மாவட்ட தலைவரே காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு எனக் கூறியுள்ளார். காங்கிரஸில் பெரிய அளவில் பிரச்சனை இருக்கிறது. அப்படியிருக்கையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் (ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற கூடணியின் வேட்பாளர்) அவர்கள் மற்ற கட்சிகளை பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது?
image
இடைத்தேர்தல் கட்சிக்கு பலப்பரிட்சை கிடையாது. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தோற்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். போட்டி பொறாமை என்பது கிடையாது.
அறநிலையத் துறை தொடர்பாக தகவல் அறிய உரிமை சட்டம் மூலம் அனைத்து தகவல்களையும் ஆதாரங்களை பெற்றுள்ளோம். மிக்சர், முறுக்கு வாங்க அறநிலையத்துறை இல்லை. உண்டியலில் இருந்து பணம் எடுத்துள்ளார்கள். உண்டியல் பணம் அதிகாரிகளின் பஜ்ஜி, போண்டா, முறுக்காக மாறக்கூடாது. நான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கூறட்டும்” என்றார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.