கடந்த அக்டோபர் மாதம் தமிழகத்தில் 100 யூனிட் மானியம் பெறும் பயனாளர்கள் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டது. அதற்காக அரசு சார்பில், தமிழகம் முழுவதும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது .
அத்துடன் மின் வாரிய அலுவலகங்களிலும் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து தருகிறார்கள். இதன் மூலம் மக்களும் தங்களது மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து வருகிறார்கள். இதனால், கம்ப்யூட்டர் மையம், மின்வாரியம் என்று கூட்டம் அலை மோதியது.
இந்தக் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் அரசு சார்பில் வெப்சைட்டும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தவகையில், மொத்தம் 2.33 கோடி வீடு மின் இணைப்புகளில் 1 கோடியே 52 லட்சம் பேர் ஆதாரை இணைத்துள்ளனர். ஆன்லைன் வழியாக 17 லட்சம் பேர் இணைத்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்று மின் சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “நேற்று வரைக்கும் மொத்தம் 2.9 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு இந்த மாதம் 31-ந் தேதி வரை கால அவகாசம் உள்ளது. ஆகவே, ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோர்கள் உடனடியாக மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.