ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத் தேர்தலில் திமுக –
காங்கிரஸ்
கூட்டணி சார்பாக ஈவிகேஎஸ்
இளங்கோவன்
வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே திமுக பிரச்சாரத்தை தொடங்கியது.
இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஈவிகேஎஸ் இளங்கோவன் சந்தித்து பேசினார். பிரச்சாரம் தொடங்கியதற்கு நன்றி தெரிவித்த அவர் முதலமைச்சரையும் பிரச்சாரத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த இளங்கோவன், கூட்டணிக் கட்சித் தலைவர்களையும்,
மக்கள் நீதி மய்யம்
கட்சித் தலைவர் கமல்ஹாசனையும் சந்தித்து ஆதரவு கோர உள்ளதாக கூறினார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுமார் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார். தனித்துப் போட்டியிட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 11 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருந்தது.
ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக இன்று காலை ஆழ்வார்பேட்டை கட்சி அலுவலகத்தில்
கமல்ஹாசன்
இன்று காலை முதலே ஆலோசனை நடத்தி வந்தார். இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதைத் தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த், அசல் மௌலனா சென்று கமல்ஹாசனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அதன் பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவன், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளோடு ஆழ்வார்பேட்டையில் மநீம அலுவலகத்தில் சந்தித்து ஆதரவு கோரினார். சட்டப்பேரவைக் குழு தலைவர் செல்வப் பெருந்தகை, முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு ஆகியோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஈவிகேஎஸ் இளங்கோவன், “திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இணைய வேண்டும் என்று கூறினேன். காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எனக்கு ஆதரவு தர வேண்டும் என்று கூறினேன். கமல்ஹாசனிடமிருந்து தேசியத்தையும், காங்கிரஸையும் யாராலும் பிரிக்க முடியாது. அவரது தந்தை காங்கிரஸ்காரர். காமராஜரோடு நெருக்கமான நட்பு கொண்டவர். நாங்கள் அவரிடம் ஆதரவு கோரிய நிலையில் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசித்து கூறுவதாக சொல்லியுள்ளார். நல்ல முடிவை அவர் இன்று அறிவிப்பார். அறிவிப்பதோடு ஈரோடு வந்து திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரிக்க வர வேண்டும். அவர் எங்களுக்கு ஆதரவு கொடுக்கும் எண்ணத்துக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன்.
அதிமுக இரண்டாக உடையவில்லை. நான்காக உடைந்துள்ளது. அந்த நான்கு பேரும் சேர்ந்து பாஜகவை ஆதரிக்கும் நிலை உருவாகியுள்ளது.
கடந்த தேர்தலில் அந்த தொகுதியில் கமல்ஹாசனின் இயக்கம் சுமார் 11000 வாக்குகள் பெற்றிருந்தது. ” என்று கூறினார்.
காங்கிரஸ் நிர்வாகிகள் சென்ற பின்னர் கமல்ஹாசன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “இந்த விவகாரம் குறித்து நான் தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. செயற்குழு உறுப்பினர்களுடன் கூட்டம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மக்களுக்கு எந்த முடிவு நன்மை பயக்கும் என்பதை ஆராய்ந்து முடிவை அறிவிப்போம்” என்று கூறினார்.