புதுடெல்லி: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்ளில் நிகழ்ந்து வரும் வேலை இழப்பு குறித்து கவலை தெரிவித்துள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், இந்தியாவில் சூழலை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபகாலங்களில் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள தகவல் தொழில்வநுட்ப நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு பணியாளர்களை பணியில் இருந்து விடுவித்து வருகிறது. இதுகுறித்து அரவிந்த் கேஜ்ரிவால் இந்தியில் வெளியிட்டுள்ள தனது ட்விட்டர் பதிவில், “ஐடி நிறுனங்களில் இருந்து பெருமாளவிலான இளைஞர்கள் வேலையில் இருந்து வெளியேற்றப்பட்டு வருகிறார்கள். மத்திய அரசு இந்தச் சூழ்நிலையை ஆராய்ந்து, இந்தியாவில் தேவையான சரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்த மாதத்தின் தொடக்கத்தில், மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது மொத்த பணியாளர்களில் 5 சதவீத ஊழியர்களான 10 ஆயிரம் பேரை பணியிலிருந்து விடுவிக்க இருக்கிறது. “உலகளாவிய பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், தொடர்ந்து நிலையான தொழில்நுட்ப நிறுவனமாக நீடிக்க மேற்கொள்ளப்படும் மிகக்கடினமான முடிவாகும் இது” என்று அந்நிறுவனம் கூறியிருந்தது. இந்தச் சூழ்நிலையை மேலும் விளக்கிய அந்நிறுவனம், “இது மாற்றத்திற்கான காலம்” என்றது.
கரோனா பெருந்தொற்று காலத்தில் தங்களது டிஜிட்டல் செலவீனங்களை அதிகரித்திருந்த வாடிக்கையாளர்கள், இப்போது அதனைக் குறைத்து, குறைந்த செலவில் அதிகமாக செய்ய விரும்புகின்றனர் என்றது மைக்ரோசாப்ட்.
ஃபேஸ்புக், அமேசான் நிறுவனங்களைத் தொடர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனம் சமீபத்தில் இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையில் தன்னை இணைந்து கொண்டது. இதன்மூலம் 2023ம் ஆண்டில் தொழில்நுட்ப நிறுவங்களில் இந்த பெரும் சோகம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.