மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கருடன் கூட்டணி அமைப்பது குறித்து கடந்த இரண்டு மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அந்த பேச்சுவார்த்தையில் இருதரப்பினருக்கும் இடையே உடன்பாடு எட்டப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக இருவரும் இன்று தாதரில் உள்ள அம்பேத்கர் பவனில் பேட்டியளித்தனர். அதில் பேசிய உத்தவ் தாக்கரே, “இன்று பாலாசாஹேப் தாக்கரேயிக்கு (Balasaheb Thackeray) பிறந்தநாள். பலரும் எங்களுடன் சேர விரும்புவது மிகவும் திருப்தி மற்றும் மகிழ்ச்சியளிக்கிறது. புதிய கூட்டணிக்காக நானும் பிரகாஷ் அம்பேத்கரும் இங்கு கூடியிருக்கிறோம்.
என் தாத்தாவும், பிரகாஷ் அம்பேத்கரின் தாத்தாவும் நண்பர்கள். அவர்கள் சமூக பிரச்னைக்காக போராடினர். தாக்கரேயிக்கும், அம்பேத்கருக்கும் ஒரு வரலாறு உண்டு. இப்போது நாடு எதிர்கொண்டிருக்கும் பிரச்னைகளுக்கு எதிராக போராட அவர்களின் புதிய சந்ததியினர் வந்திருக்கின்றனர். தேவையற்ற பிரச்னைகள் மற்றும் குழப்பங்களால் மக்கள் ஏமாற்றமடைந்து எதேச்சதிகாரத்துக்கு வழி வகுத்திருக்கின்றனர். தீயவற்றுக்கு எதிராக போராட ஒரு முடிவெடுத்திருக்கிறோம். இந்த புதிய கூட்டணி மும்பை மாநகராட்சிக்கு நடக்கும் தேர்தலில் பா.ஜ.க கூட்டணியை எதிர்த்து போட்டியிடும்” என்று தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து பேசிய பிரகாஷ் அம்பேத்கர், “நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் கூட்டணி புதிய அரசியலின் தொடக்கம் ஆகும். சமூக பிரச்னையில் இணைந்து போராட்டங்களை நடத்துகிறோம்.
சமூக பிரச்னையில் வெற்றி பெறுவது வாக்காளர்கள் கையில்தான் இருக்கிறது. ஆனால் அப்படிப்பட்டவர்களுக்கு போட்டியிட சீட் கொடுப்பது அரசியல் கட்சிகளின் கையில்தான் இருக்கிறது. சில கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளை ஒழிக்க முயன்ற சம்பவங்களும் நடந்திருக்கிறது. ஆனால் ஒரு அரசியல் கட்சியின் வெற்றியை மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். நாட்டின் இந்த ஜனநாயக முறையை யாராலும் மாற்ற முடியாது. எங்களது கூட்டணியை காங்கிரஸ் இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. இப்போதைக்கு நாங்கள் இரண்டு பேர்தான் கூட்டணியில் இருக்கிறோம். சரத் பவார் எங்களது கூட்டணியில் சேருவார் என்று நம்புகிறோம். காங்கிரஸ் கட்சி மீது எனக்கு நம்பிக்கை இல்லை.
அவர்கள் 2029-ம் ஆண்டு தேர்தலுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். காங்கிரஸ் தொடர்ச்சியாக தோல்வியடைந்து கொண்டிருந்த நேரத்தில், நான் 12 தொகுதிகள் கேட்டேன். ஆனால் காங்கிரஸ் கொடுக்க மறுத்துவிட்டது. மகாவிகாஷ் அகாடியில் கருத்து வேறுபாடு இருக்கிறது. இது குறித்து அடுத்த 10 நாள்களில் தெளிவாக தெரியவரும்” என்று தெரிவித்தார்.
ஆனால், இந்தக் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க சரத் பவார் மறுத்துவிட்டார்.
மும்பை மாநகராட்சி தேர்தலில் எப்படியும் வெற்றி பெற வேண்டும் என்ற முடிவோடு உத்தவ் தாக்கரே இருக்கிறார். மும்பையில் முஸ்லிம் வாக்கு கணிசமாக இருக்கிறது. வஞ்சித் பகுஜன் அகாடியில் (Vanchit Bahujan Aaghadi), அசாதுதீன் கட்சியும் (All India Majlis-e-Ittehadul Muslimeen) இடம்பிடித்திருக்கிறது. அதோடு பட்டியலின மக்களின் வாக்குகளும் சேரும்போது சிவசேனாவின் வெற்றி எளிதாக அமையும் என்று உத்தவ் தாக்கரே நினைக்கிறார்.
அதனால்தான் சரத் பவாரிடம்கூட கேட்காமல் தன்னிச்சையாக பிரகாஷ் அம்பேத்கரை தன்னுடைய கூட்டணியில் உத்தவ் தாக்கரே சேர்த்துக்கொண்டிருக்கிறார். கூட்டணியில் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் கட்சியும் இணையுமா என்று தெரியவில்லை. 2019-ம் ஆண்டு தேர்தலில் பிரகாஷ் அம்பேத்கருடன் இணைந்து கூட்டணி அமைக்க சரத் பவார் முயற்சி மேற்கொண்டார். ஆனால் அது கடைசி வரை நடக்காமல் போய்விட்டது.