ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து ஆதரவு கோரினார். அதனை ஏற்றுக்கொண்ட திருமாவளவன் காங்கிரசுக்கு பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபடவும் சம்மதித்துள்ளார். இந்த நிகழ்வின் போது திருமாவளவனும், இளங்கோவனும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய
காங்கிரஸ்
வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன்; இடைத்தேர்தலில் பாஜக ஆதரவுடன் அதிமுக நின்றாலும் சரி, நான்கு அதிமுக அணிகளின் ஆதரவில் பாஜக நின்றாலும் சரி எனக்கு கவலையில்லை. ஏனென்றால் திமுக கூட்டணிக்கு தான் வெற்றி என்பது ஏற்கனவே நிச்சயமாகிவிட்டது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் அரணாக நின்று காக்கும் முதல்வர் ஸ்டாலினுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் நன்றியுடைவர்களாக இருப்பார்கள் என்று நம்புகிறேன் என்றார்.
இதனை அடுத்து பேசிய திருமாவளவன் கூறியதாவது; இடைத்தேர்தலில் போட்டியிடும் அண்ணன் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. தமிழ்நாட்டை பெரியார் மண் என்கிறோம், அதிலும் குறிப்பாக ஈரோடு, சமூக நீதி அரசியலுக்கான ஆணி வேர் தோன்றிய மண். பெரியாரின் குடும்பத்தை சார்ந்த வாரிசாக ஈவிகேஎஸ் இளங்கோவன் அந்த களத்தில் நிற்கிறார்.
இவரது வெற்றி, ஈரோடு கிழக்கு தொகுதி மக்கள் திராவிட அரசுக்கு தரப்போகும் பரிசு. ஈரோடு உண்மையில் பெரியார் மண்தான் என்பதற்கு சான்றாக இந்த வெற்றி இருக்கும். பாஜகவின் தோளில் ஏறி நிற்கும் நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. எப்படியாவது பாஜகவை தமிழ்நாட்டிற்குள் வளர்ந்துவிட்ட அனைத்து வேலைகளையும் அதிமுக செய்து கொண்டிருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எட்டிப்பார்த்தாலும் எதிரிகளே இல்லை. அவர்கள் எதனை வேட்பாளர்களை நிறுத்தினாலும் டெப்பாசிட் வாங்குவார்களா என்பதே கேள்விக்குறிதான். எனவே இந்த தேர்தலில் திராவிட கூட்டணி பெறப்போகும் வெற்றி, ஒட்டுமொத்த இந்திய அளவில் ராகுல்காந்தி எடுக்கும் முயற்சிக்கான அடித்தளமாக அமையும் என திருமாவளவன் கூறினார்.