புதுடெல்லி: இந்தியாவின் செல்வாக்கை குறைக்க சீனா என்னவெல்லாம் செய்கிறது என்பது குறித்த அறிக்கை, புதுடெல்லியில் நடைபெற்ற டிஜிபிக்கள் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பாதுகாப்பு சார்ந்த உயர்மட்ட ஆய்வுக்கூட்டம் புதுடெல்லியில் நடந்து முடிந்துள்ளது. 3 நாட்கள் நடைபெற்ற இந்த ஆய்வுக் கூட்டத்தில், நாடு முழுவதிலும் இருந்து 350 மிக முக்கிய டிஜிபி-க்கள், ஐஜிபி-க்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்து கொண்டு உரையாற்றினர்.
இந்த ஆய்வுக்கூட்டத்தில், நாட்டின் மூத்த ஐபிஎஸ் எதிகாரிகள் தயாரித்த சீனா குறித்த மிக முக்கிய அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ‘இந்தியாவின் அண்டை நாடுகளில் நிலவும் சீன செல்வாக்கும், அது இந்தியாவுக்கு ஏற்படுத்தும் தாக்கமும்’ என்ற பொருளில் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்க சீனா என்னவெல்லாம் செய்கிறது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது.
”கடந்த 25 ஆண்டுகளில் சீன பொருளாதாரம் மிகப் பெரிய அளவில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக, இந்தியாவின் அண்டை நாடுகளில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள அந்த நாடு அதிக அளவில் கடன்களை கொடுத்து வருகிறது. குறிப்பாக, பாகிஸ்தான், நேபாளம், பங்களாதேஷ், மியான்மர், இலங்கை ஆகிய நாடுகளுக்கு அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தவும், பிற பொருளாதார காரணங்களுக்காகவும் சீனா அதிக கடன்களைக் கொடுக்கிறது.
நமது அண்டை நாடுகளும் தங்களின் வளர்ச்சிக்கான பங்குதாரராக சீனாவைப் பார்க்கின்றன. இதில் எந்த நாடும் விதிவிலக்காக இல்லை. வங்கதேசம் மற்றும் இலங்கையின் மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக சீனாதான் இருக்கிறது. நேபாளம் மற்றும் மாலத்தீவுகளுக்கு இரண்டாவது மிகப் பெரிய வர்த்தக பங்குதாரராக சீனா விளங்குகிறது.
பொருளாதாரம், வர்த்தகம் ஆகியவற்றைத் தாண்டி அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்தும் சீனா தனது உறவை வளர்த்து வருகிறது. குறிப்பாக, கரோனா தொற்று இதற்கான வாய்ப்பை சீனாவுக்கு அளித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி நமது அண்டை நாடுகளுக்கு பல்வேறு அறிவியல், தொழில்நுட்ப உதவிகளை சீனா அளித்து வருகிறது.
சீனா இவ்வாறு செயல்படுவதன் ஒரே நோக்கம், இந்த பிராந்தியத்தில் இந்தியாவின் செல்வாக்கை குறைக்க வேண்டும் என்பதுதான். இந்திய பெருங்கடலில் தனக்கு இருக்கும் ஒரே சவாலாக இந்தியாவைத்தான் சீனா பார்க்கிறது. இந்திய பெருங்கடல் பகுதியில் சக்தி வாய்ந்த நாடாக தான் இருக்க வேண்டும் என்று சீனா தீவிரமாக விரும்புகிறது. இதற்காக இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்க திட்டமிடுகிறது.
எல்லை விவகாரத்தில் தனது விருப்பத்திற்கு இணங்க ஒப்பந்தத்தை மேற்கொள்ள இந்தியாவை அந்த நாடு நிர்ப்பந்திக்கிறது. இதற்கு இந்தியா உடன்படாததால், எல்லையில் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.