புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஒருமுறை பயன்படுத்தும் பாலித்தீன் பைகள், பிளாட்டிக் குவளைகள், தெர்மாகோல் தட்டுகள், தண்ணீர் பாக்கெட், பிளாஸ்ட்டிக் உறிஞ்சு குழல் (ஸ்டா), பிளாஸ்டிக் கொடி உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.
இருப்பினும் இப்பொருட்களை சில தொழிற்சாலைகள் ரகசியமாக உற்பத்தி செய்து வருகின்றன. இத்தகைய தொழிற்சாலைகளை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் ஆய்வு செய்து, அத்தகைய பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது. உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. குறிப்பாக கடந்த 3 மாதங்களில் மட்டும் மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் 4 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சாலை அமைக்கவும் முடிவு செய்தனர்.
அதன்படி புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழுமம், பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சி துறையுடன் இணைந்து பிரதம மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டத்தில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட கொருக்கன்மேடு பகுதியில் பறிமுதல் செய்த 4 டன் பிளாஸ்டிக் பொருட்களில், முதலில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு தார் சாலை அமைக்கும் பணியை இன்று தொடங்கினர்.
2 கிலோ மீட்டர் தூரம் வரை அமைக்கப்படும் இந்த சாலை பணி நிகழ்வில் புதுச்சேரி மாசுகட்டுப்பாட்டு வாரிய உறுப்பினர் செயலர் டாக்டர். ரமேஷ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சௌந்தராஜன், ஊரக வளர்ச்சி துறை செயற் பொறியாளர் பாலசுப்ரமணியன், உதவிப்பொறியாளர் கோதண்டம், கோபி, இளநிலை பொறியாளர் சுரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் ஏற்கனவே இடையார்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.