மலை ரயிலை வழிமறித்த காட்டு யானை கூட்டம்

குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயிலை வழிமறித்த காட்டுயானை கூட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைபாதையில் காட்டு யானைகள் கூட்டம் கடந்த சில நாட்களாக முகாமிட்டுள்ளது. அவ்வப்போது உணவிற்காக மலைபாதையிலும், மலை ரயில் பாதையிலும் முகாமிடுவதால் மலை ரயில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை குன்னுரிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்ற மலை ரயிலை 9க்கும் மேற்பட்ட காட்டு யானைகள்  கூட்டம் வழிமறித்தது.

இதனால் மலை ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது. சுமார் அரை மணி நேரம் ரயில்பாதையில் நின்ற காட்டு யானைகள் தாமாக வனப்பகுதிக்குள் சென்றது. இதனால் ரயிலில் இருந்த சுற்றுலாபயணிகள் நிம்மதி அடைந்தனர். மலை ரயிலை காட்டு யானைகள் வழிமறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து மலைரயில் பாதையில் காட்டு யானைகள் முகாமிடுவதை தடுக்க வனத்துறை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.