சந்தையில் சிப் தட்டுப்பாடு காரணமாக மடிக்கணினி வழங்குவதில் தாமதம் – அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம்

சென்னை: சந்தையில் நிலவும் சிப் தட்டுப்பாடு காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்குவதில் தாமதம் நிலவுவதாக பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதற்கு அதற்குரிய விவரங்களை நிதித்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் கோளாறால் ஆசிரியர்கள் தகவல்களை பதிவேற்றுவதில் சிரமம் இருந்தது. இந்த விவரத்தை நிதித்துறைக்கு தெரிவித்து சிக்கல் சரிசெய்யப்பட்டது. தற்போது வலைதளம் வழக்கம்போல் இயங்குகிறது. எனவே, ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது.

அரசு உதவிபெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் மட்டுமே தொழிற் பயிற்சி மைய ஆசிரியர்களாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். மாணவர் நலன்கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகள் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது. விதிகளை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் பள்ளிக் கல்வித்துறைக்கு தகவல் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.

விரைவில் விநியோகம்: இலவச மடிக்கணினி திட்டத்தில் மொத்தம் 11 லட்சம் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினி வழங்க வேண்டியுள்ளது. தற்போது சந்தையில் கணினி தயாரிப்புக்கான சிப் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, மாணவர்களுக்கு தேவையான மடிக்கணினிகள் விரைவில் கொள்முதல்செய்யப்பட்டு விநியோகிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.