10 ரூபாய் நோட்டுகளை பறக்கவிட்டு போக்குவரத்துக்கு இடையூறு – மனநலம் குன்றியவரை தேடும் பெங்களூர் போலீஸார்

பெங்களூரு: பெங்களூருவில் உள்ள பெரிய சந்தைகளில் ஒன்றான கே.ஆர்.மார்க்கெட் பகுதியில் பூ, காய்கறி, பழம், துணி, மின்சாதன பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் கே.ஆர்.மார்க்கெட் சாலை மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்து எப்போதும் பரபரப்பாக காணப்படும். இந்நிலையில், நேற்றுகாலையில் கே.ஆர்.மேம்பாலத்துக்கு இரு சக்கர வாகனத்தில் வந்த 35 வயது மதிக்கத்தக்க இளைஞர் கோட் சூட் அணிந்து அவரது கழுத்தில் பெரிய கடிகாரத்தையும் தொங்கவிட்டிருந்தார்.

திடீரென மேம்பாலத்தில் சென்ற வாகனங்களை நிறுத்திய அவர், தனது பையில் இருந்த 10 ரூபாய் நோட்டுகளை எடுத்து வீசினார். அதேபோல மேம்பால‌த்தில் நின்றவாறு ரூபாய் நோட்டுகளை கீழேயும் வீசினார். திடீரென ரூபாய் நோட்டுகள் காற்றில் பறந்து வந்ததால் சாலையில் சென்ற பொதுமக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு ரூபாய் நோட்டுகளை பொறுக்கினர். வாகனத்தில் சென்றவர்களும் ஓடி சென்று ரூபாய் நோட்டுகளை எடுத்தனர். இதனால் கே.ஆர்.மார்க்கெட் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

ஹட்சன் சதுக்கத்தில் இருந்து மைசூரு சாலை வரை வாகனங்கள் நகர முடியாமல் தேங்கின. ரூபாய் நோட்டுகளை வீசிய பின்னர் அந்த‌ நபர் அங்கிருந்து இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றார்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கே.ஆர்.மார்க்கெட் போலீஸார் போக்குவரத்தை சீர் செய்தனர். மேலும் திடீரென ரூபாய் நோட்டுகளை வீசி போக்குவரத்துக்கு இடையூறு செய்ததுடன் சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்திய அந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்தனர். ரூபாய் நோட்டுகளை வீசிய நபரின் வீடியோ பதிவுகளை சேகரித்து, அவரைப் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் பணத்தை வீசிய நபரின் பெயர்அருண் (36) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில்இருப்பதாகவும் தெரியவந்துள் ளது. ரூ.3 ஆயிரம் மதிப்பிலான 10 ரூபாய் நோட்டுகளை அவர்வீசியதாக போலீஸார் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.