திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகிலிருக்கும் வடுகசாத்து கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள், அரசுப் பள்ளியில் 12-ம் வகுப்புப் படித்து வந்தார். இந்த மாணவிக்கு ஆரணி அடுத்திருக்கும் களம்பூர் அரியாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 19 வயதுடைய ஐ.டி.ஐ மாணவன் ஒருவனுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மாணவனின் ரீல்ஸ் வீடியோக்கள் மாணவியை கவர்ந்ததால், காதல் வயப்பட்டார். இருவரும் செல்போன் நம்பர்களை பரிமாறிக்கொண்டு பேசிவந்தனர். இவர்களின் காதல் விவகாரம் இருத்தரப்பு வீட்டுக்கும் சமீபத்தில் தெரியவந்தது. ‘இந்த வயதில் காதலிப்பது தவறு’ என பெற்றோர்கள் கண்டித்திருக்கிறார்கள். இதனால் மனவேதனையடைந்த மாணவனும், மாணவியும் நேற்று முன்தினம் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியிருக்கிறார்கள். பதறிபோன பெற்றோர்கள் பலஇடங்களில் தேடியிருக்கிறார்கள்.
இதனிடையே, ‘பெற்றோர்கள் பிரித்து விடுவார்களோ..?’ என்று வருத்தப்பட்டு தற்கொலை செய்துகொள்ளும் முடிவுக்கு வந்த இருவரும் ஆரணி அருகிலிருக்கும் வடமாதிமங்கலம் பகுதிக்குச் சென்று, தண்டவாளத்தில் கைகோத்தபடி நின்றனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த ரயில் மோதியதில் இருவரும் உடல் சிதறி உயிரிழந்தனர். நேற்றைய தினம் அந்த வழியாக சென்றவர்கள், இருவரின் உடல்களையும் பார்த்து காட்பாடி ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். போலீஸார் விரைந்துசென்று உடல்களை மீட்டு விசாரணை நடத்தியபோது தான், மேற்கண்ட காதல் விவகாரம் தெரியவந்தது. இந்தச் சம்பவம், இருத்தரப்பு பெற்றோர்கள் இடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.