பள்ளிப் பேருந்து ஓட்டையிலிருந்து விழுந்து உயிரிழந்த சிறுமி வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

தாம்பரம் அருகே சேலையூரில் கடந்த 2012ஆம் ஆண்டு தனியார் பள்ளிப் பேருந்தில் பயணித்த சிறுமி சுருதி, அதிலிருந்த ஓட்டை வழியாக, விழுந்து பலியானார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்தது. இதில், குற்றம்சாட்டப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்து செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தனியார் பள்ளிப் பேருந்தின் இருக்கைக்கு கீழே இருந்த ஓட்டை வழியாகத் தவறி விழுந்த பள்ளி மாணவி சுருதி, பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தார்.இந்த சம்பவம் நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்பு தான் தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரிய வந்தது.

சென்னை முடிச்சூரை அடுத்து வரதபரத்வாஜ் நகர் குடியிருப்பில் வசித்து வந்த ஆட்டோ ஓட்டுநர் சேதுமாதவன் மகள் சுருதி (7). சேலையூர் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வந்தார்.சம்பவத்தன்று பள்ளி முடிந்து சுருதி பேருந்தில் வீட்டுக்குச் செல்லும் போது, இருக்கைக்குக் கீழே இருந்த ஓட்டையை மறைக்கப் போடப்பட்டிருந்த அட்டை விலகி, அதில் சுருதி தவறி விழுந்தார். இதில், அவர் பேருந்தின் பின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறியாமல், பேருந்து ஓட்டுநர் சீமான், பேருந்தை இயக்கிய நிலையில், வாகன ஓட்டிகள்தான் பேருந்தை விரட்டிச் சென்று பிடித்தனர்.ஆத்திரத்தில் மக்கள் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதோடு, பேருந்துக்கும் தீ வைத்தனர். இந்த சம்பவம் சென்னை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. இந்த சம்பவத்துக்குப் பிறகுதான், பள்ளிப் பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.