புதுடெல்லி: மத்திய பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு வழக்கமாக நடைபெறும் அல்வா தயாரிக்கும் விழா கரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடைபெறவில்லை. தற்போது கரோனா பாதிப்பு குறைந்துள்ளதால் அல்வா தயாரிக்கும் விழாவை இன்று நடத்த நிதியமைச்சகம் முடிவு செய்துள்ளது.
பட்ஜெட் தயாரிப்பதற்கான பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதை குறிக்கும் வகையில் இந்த அல்வா தயாரிப்பு விழா நடத்தப்படுகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடாயில் அல்வாவை கிளறி சக அமைச்சக பணியாளர்களுக்கு இன்று பரிமாற உள்ளார். நாடாளு மன்றத்தின் நார்த் பிளாக்கில் இந்த அல்வா கிண்டும் நிகழ்வு நடைபெறும். இதனையடுத்து, பட்ஜெட் தொடர்பான அச்சுப் பணிகள் தொடங்கும். பிப்ரவரி 1-ம் தேதி நிதியமைச்சர் 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளார். பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் முழு நிதி யாண்டுக்கான கடைசி பட்ஜெட் இதுவாகும். 2024-ல் தேர்தல் நடைபெறவுள்ளதால், அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும்.
மத்திய நிதி ஆயோக் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சகங் களுடன் கலந்தாலோசித்து நிதிஅமைச்சகம் பட்ஜெட்டை தயாரித்துள்ளது. கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, எம்.பி.க்கள் மற்றும் பொதுமக்கள் பட்ஜெட் ஆவணங்களை சிரமமின்றி அணுக ‘‘யூனியன் பட்ஜெட் மொபைல் ஆப்’’ தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.