சென்னை: நாட்டின் 74-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அவர் தனது உரையில் “நாட்டுக்காக உயிர் தியாக செய்த தீரமிக்க வீரர்களை நாம் இன்று நன்றியுடன் நினைவுகூர்வோம். நமது ராணுவத்திற்கு நன்றி செலுத்துவோம். காலத்தை வென்ற அரசியலமைப்பு வழங்கிய அம்பேத்கருக்கு நன்றி தெரிவிப்போம். ருக்மணி லட்சுமிபதி குயிலி அஞ்சலை அம்மாள் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வஉசி, பாரதியார், வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்துவோம். வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது.
இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவுகிறது.வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம்” என்று குறிப்பிட்டார்.
முன்னதாக ஆளுநர் மாளிகை வெளியிட்ட ட்வீட்டில், “இந்நாளில் நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவர்களின் தியாகங்களுக்காக தேசம் எப்போதும் பெருமிதம் கொள்ளும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்நாளில் நமது ராணுவத்துக்கு வணக்கம் செலுத்துவோம். பாரத இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாட்டை காத்து, எதிரி நடவடிக்கைகளை முறியடித்து இன்னுயிரை தியாகம் செய்த தீரம் மிக்க நம் வீரர்களை தேசம் நன்றியுடன் நினைவுகூர்கிறது. அவர்களின் தியாகங்களுக்காக தேசம் எப்போதும் பெருமிதம் கொள்ளும்.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 26, 2023
தொடர்ந்து அவர் காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்றுகிறார். குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் சென்னை கடற்கரை சாலையில் காந்தி சிலை அருகே கவர்னர் தேசியக்கொடி ஏற்றுவது வழக்கம். தற்போது அந்த இடத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருவதால் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே கொடியேற்று விழா நடைபெறுகிறது.
இன்று மாலை 4.30 மணியளவில் தமிழ்நாடு ஆளுநர் மாளிகையில் வைத்து தேநீர் விருந்து நடைபெற உள்ளது. இந்த தேநீர் விருந்துக்கு அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தைப் புறக்கணிப்பதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. தமிழக முதல்வருக்கு ஆளுநர் தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுத்திருக்கிறார்.