இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைப்பு ..?

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கான வேட்பு மனு தாக்கல் வருகிற 31-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 7-ந் தேதி வரை நடக்கிறது. 8-ந்தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. 10-ந் தேதி வேட்பு மனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும்.

வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், 500 கட்டுப்பாட்டு கருவிகள், 500 வி.வி. பேட் எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த எந்திரங்கள் சரியாக இயங்குகிறதா? ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா? என்பதை சரி பார்க்கும் பணி கடந்த 5 நாட்களாக ஆர்.டி.ஓ. அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரக் கிடங்கில் நடந்து வந்தது. மாதிரி வாக்குப்பதிவும் நடைபெற்றது. இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியும் கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓட்டுப்பதிவு நேரத்தை, கொரோனா பரவல் இல்லாததால் மாற்றி அமைப்பது குறித்து, தேர்தல் ஆணையத்துக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் கடிதம் அனுப்பி உள்ளார்.

தமிழகத்தில் கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது கொரோனா பரவல் இருந்தது. இதனால், ஓட்டுப்பதிவு செய்ய வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்க வெள்ளை சுண்ணாம்பில் வட்டம் வரைந்து அதில் வந்து ஓட்டுப்பதிவு செய்தனர். அதிகாரிகள், வாக்காளர்களுக்கு சானிடைசர், கிளவுஸ் வழங்கப்பட்டது. மாஸ்க் அணிந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர கொரோனா தொற்று பாதித்து, சிகிச்சை நிறைவு செய்து வந்தவர்களுக்கு அதற்கான பிரத்யோக ஆடை அணிவிக்க செய்து மாலை, 6 மணி முதல் 7 மணி வரை அவர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.அந்த தேர்தலில் கூடுதல் நேரம் ஆகும் என்பதால் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தேர்தல் நடந்தது.

இதுதவிர 1,000 வாக்காளர்களுக்கு மேல் இருந்த ஓட்டுச்சாவடிகள் ஆண், பெண் என பிரிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் இல்லாததால், கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 350 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது இடைத்தேர்தலில் கிழக்கு தொகுதியில் 238 ஓட்டுச்சாவடிகளாக குறைக்கப்பட்டுள்ளது. ஒரு ஓட்டுச்சாவடியில் அதிகப்பட்சமாக 1,400 வாக்காளர்கள் வரை ஓட்டுப்பதிவு செய்ய உள்ளனர்.

அத்துடன் விரைவான ஓட்டுப்பதிவுக்காக, கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததுபோல காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டும் ஓட்டுப்பதிவு நேரத்தை அனுமதிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலர் சார்பில் தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார். தேர்தல் ஆணையம் விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடும் என தேர்தல் பிரிவு அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஒரு மணி நேரம் குறைகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.