இந்தூர்,
இந்தூரில் நேற்று முன்தினம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி தரப்பில் ரோகித் சர்மா (101 ரன்கள்), சுப்மன் கில் (112 ரன்கள்) ஆகியோர் சதம் அடித்தனர். ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா விளாசிய 30-வது சதம் இதுவாகும். 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்துக்கு பிறகு சர்வதேச ஒருநாள் போட்டியில் அவர் அடித்த முதல் சதம் இதுவாகும். இதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங்கின் (30 சதம்) சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார்.
போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நான் கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு அடித்த முதல் சதம் இதுவாகும் என்று ஒளிபரப்பு நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. நான் கடந்த 3 ஆண்டுகளில் மொத்தமே 12 ஒருநாள் போட்டியில் தான் விளையாடி இருக்கிறேன். நீங்கள் 3 ஆண்டுகள் என்று பலமாக சொல்வது மிகவும் அதிக காலம் போல் தோன்றுகிறது. என்ன நடக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். ஒளிபரப்பு நிறுவனம் புள்ளி விவரங்களை சரியான பார்வையில் கொடுக்க வேண்டும்.
2020-ம் ஆண்டில் கொரோனா காரணமாக எந்தவித போட்டியும் நடைபெறவில்லை. நாம் அனைவரும் வீட்டில் தான் இருந்தோம். அதன் பிறகு ஒருநாள் போட்டியில் இந்திய அணி பெரிய அளவில் விளையாடவில்லை. காயம் காரணமாக அந்த சமயத்தில் நான் 2 டெஸ்ட் போட்டியில் தான் ஆடினேன். எனவே நீங்கள் இதனையெல்லாம் கவனத்தில் கொண்டு இதுபோன்ற செய்தியை வெளியிட வேண்டும். கடந்த ஆண்டு 20 ஓவர் உலகக் கோப்பை போட்டி நடந்ததால் 20 ஓவர் போட்டிகளில் தான் நமது அணி அதிகம் ஆடியது. 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை பொறுத்தமட்டில் சூர்யகுமார் யாதவை விட சிறந்த பேட்ஸ்மேன் வேறு யாரும் இப்போது கிடையாது. அவர் கடந்த 3 மாதங்களில் 2 சதங்கள் அடித்துள்ளார். தற்போது மற்ற யாரும் அவரை போன்று சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
ஷர்துல் தாக்குர் தனது 2-வது கட்ட பந்து வீச்சில் அடுத்தடுத்த பந்துகளில் டேரில் மிட்செல், டாம் லாதம் விக்கெட்டையும், தனது அடுத்த ஓவரில் கிளென் பிலிப்ஸ் விக்கெட்டையும் வீழ்த்தி ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அவர் முக்கியமான தருணத்தில் விக்கெட்டை கைப்பற்றினார். ஒருநாள் போட்டி மட்டுமின்றி டெஸ்ட் போட்டியிலும் அவர் முக்கிய தருணத்தில் விக்கெட்டை வீழ்த்தும் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். அவர் எங்களுக்கு முக்கியமான வீரர். அவர் இதுபோல் தொடர்ந்து செயல்பட்டால் அணிக்கு நல்லது மட்டுமின்றி அவரது நம்பிக்கையையும் அதிகரிக்கும். டாம் லாதம் விக்கெட்டை வீழ்த்த விராட்கோலி, ஹர்திக், தாக்குர் ஆகியோர் இணைந்து யுக்தி அமைத்து செயல்பட்டனர்.
இந்த போட்டி தொடரில் சுப்மன் கில் அருமையாக பேட்டிங் செய்தார். அவர் ஆட்டத்தை நன்கு புரிந்து கொண்டு முதிர்ச்சியுடன் செயல்பட்டு அசத்துகிறார். முதலாவது ஆட்டத்தில் அவர் இரட்டை சதம் அடித்தது எளிதான விஷயமில்லை. உண்மையை சொல்ல வேண்டுமானால் தரவரிசை குறித்து நாங்கள் அதிகம் சிந்திப்பது கிடையாது. இந்த தொடருக்கு முன்பு தரவரிசையில் நாங்கள் 4-வது இடத்தில் இருந்தோம். கடந்த ஆண்டு எந்த தொடரையும் இழக்காத நாங்கள் எப்படி 4-வது இடத்தில் இருந்தோம் என்பது எனக்கு புரியவில்லை. இது குறித்து நாங்கள் அதிகம் கவனம் செலுத்துவதில்லை. பெரிய போட்டிகளுக்கு நாங்கள் தயாராகி வருகிறோம். எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க விரும்புகிறோம். இதுபோன்ற எல்லா தொடர்களும் நம்பிக்கையை தருகின்றன.
முதுகுபகுதியில் ஏற்பட்டு இருக்கும் காயத்தில் இருந்து மீண்டு இருக்கும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் உடல் தகுதி நிலை குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாடவில்லை. அடுத்த 2 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடுவார் என்று நம்புகிறேன். முதுகுப்பகுதி காயம் என்பது பிரச்சினைக்குரியதாகும். அடுத்து நிறைய போட்டிகள் வர இருக்கின்றன. எனவே. பும்ரா உடல் தகுதி பிரச்சினையில் ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இந்த விஷயத்தில் டாக்டர்களின் ஆலோசனைபடி கவனமாக முடிவு எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.