"கலைஞர் வச்சி செய்வார்; ஸ்டாலின் கூப்பிட்டு வச்சி செய்வார்" – எம்.பி ஆ.ராசா பேச்சு

“எங்கள் மொழி, எங்கள் இனம், எங்கள் கலாச்சாரம் என்பது வேறு. ஆனால் ஒன்றிய அரசின் பாதுகாப்பிற்கு குந்தகம் வரும்போது அதனை பாதுகாக்கும் பொறுப்பில் நாங்கள் முதலில் இருக்கிறோம்” என கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்  பொதுக்கூட்டத்தில் எம்.பி ஆ.ராசா பேசினார்.

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக மாணவரணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் கூட்டம் மாணவரணி அமைப்பாளர் விஜய ஆனந்த தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும்,சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் மற்றும் நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டு மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தி சிறப்புரை ஆற்றினர்.
அப்பொழுது பேசிய எம்.பி ராசா, ”தமிழ்நாட்டுக்கு என்று தனி கலாச்சாரம் இருக்கிறது. தமிழ் மொழிக்கு என்று தனித்த அடையாளம் இருக்கிறது. எங்களை தனி நாடு கேட்க வைத்து விடாதீர்கள் என்று நான் சொன்னால் டெல்லி வரை அலறுகிறது. `ராசாவை கைது செய்யுங்கள்; ராசா தீவிரவாதி’ என கூறுகிறார்கள். ஆனால் மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்டவர்கள் `இந்தியா முழுவதும் ஒரே கலாச்சாரத்தோடு ஒரே மாதிரியாக இருக்கிறது; தமிழகம் மட்டும் தனித்து இருக்கிறது’ எனவும், தமிழகத்திற்கு வருகை புரிந்த ஜே.பி நட்டா அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு வருகை தந்து பேசும்பொழுது `இந்தியா முழுக்க ஒரே பண்பாடு ஒரே கலாச்சாரமாக இருக்கிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் தனித்து இருக்கிறது. இது இந்தியாவிற்கு நல்லதல்ல’ எனவும் பேசினார்.

image
இதே கருத்தை தான் நானும் பேசினேன். ஒரு காலத்தில் `திராவிட நாடு, தனித்தமிழ்நாடு’ என கேட்டிருந்த பொழுதும் ஒன்றிய அரசாங்கத்திற்கும் இந்திய பாதுகாப்பிற்கும் இடர்பாடு வருகின்ற பொழுது அதை பாதுகாக்கும் பொறுப்பில் நாம் தான் இருக்கிறோம். போர்க்காலங்களில் இந்தியாவில் வேறு எந்த முதல்வரும் கொடுக்காத அளவிற்கு நிதியை திரட்டி தந்தது முன்னாள் முதல்வர் கலைஞர் தான்.
image
`கலைஞர் வச்சி செய்வார்; கலைஞர் மகன் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கூப்பிட்டு வைத்து செய்வார்’ என நிரூபித்து இருக்கின்ற காரணத்தால், திராவிட தத்துவத்தை உலகிற்கு வழங்கி 2024-ம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் யார் என்பதை தீர்மானிக்கும் தலைவராக மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார்” என்றார்.
இந்த பொதுக்கூட்டத்தில் தெற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் மாற்றுக்கட்சியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் அக்கட்சியில் இருந்து விலகி நாடாளுமன்ற உறுப்பினர் ராசா முன்னிலையில் திமுக வில் இணைந்தனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.