நாட்டின் 74-வது குடியரசு தினவிழா இந்தியா முழுவதும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. தமிழ்நாட்டில் குடியரசு தின விழா ஒவ்வோர் ஆண்டும், சென்னை மெரினா கடற்கரை சாலையிலுள்ள காந்தி சிலை அருகில் நடைபெறுவது வழக்கம். தற்போது அந்தப் பகுதியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால், குடியரசு தின விழா மெரினா கடற்கரை சாலையிலுள்ள உழைப்பாளர் சிலை அருகில் நடைபெற்றுவருகிறது.
இந்த விழாவில் தமிழ்நாட்டின் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் உயரதிகாரிகள் கலந்துகொண்டனர். விழாவில் கலந்துகொள்ள காலை 7:52 மணிக்கு விழா பகுதிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை தந்தார். அதைத் தொடர்ந்து 7:58-க்கு ஆளுநர் ரவி மேடைக்கு அருகே வருகைதந்தார். ஆளுநரை, முதலமைச்சர் ஸ்டாலின் பசுமை கூடை வழங்கி வரவேற்ற பின்னர், அங்கிருந்த கம்பத்தில் தேசியக்கொடியை ஆளுநர் ரவி ஏற்றினார்.
அப்போது அந்தப் பகுதியில் இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் பறந்து வந்து மலர் தூவியது. தொடர்ந்து ராணுவ படை பிரிவு, கடற்படை பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.