தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா ஏற்பாடுகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளன. இந்தியா கேட் முதல் ராஷ்டிரபதி பவன் வரையிலான இரண்டு கிலோமீட்டர் நீளம் கொண்ட கடமைப் பாதையில் அலங்காரங்கள், அணிவகுப்பு, பாதுகாப்பு என சிறப்பான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். பின்னர் கடமைப் பாதைக்கு வருகை புரிந்தார். அங்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு மற்றும் எகிப்து அதிபர் அப்துல் பதஏ எல்-சிசியை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் கடமைப் பாதையில் தேசியக் கொடியை குடியரசு தலைவர் ஏற்றினார். இந்த விழாவில் துணை குடியரசு தலைவர், மத்திய அமைச்சர்கள், அதிகாரிகள், ராணுவ வீரர்கள் கலந்து கொண்டனர். தேசியக் கொடிக்கு பீரங்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு தொடங்கியது. இதில் பல படைப்பிரிவு வீரர்கள் அணிவகுத்து சென்றனர். கேப்டன் அமன்ஜீத் சிங் தலைமையிலான அர்ஜுன் பீரங்கி அணிவகுத்து சென்றது. இதையடுத்து 75 பேர் கொண்ட படை பின்னால் வந்தது. NAG ஏவுகணை சிஸ்டத்தின் தலைவர் லெப்டினன்ட் சித்தார்தா தியாகி தலைமையில் 17 பேர் கொண்ட ரெஜிமென்ட் அணிவகுத்து சென்றது. கேப்டன் நவீன் தட்டர்வால் தலைமையில் விரைவு அதிரடி போர் வாகனம் சென்றது. கூடவே 3 லடாக் ஸ்கவுட் ரெஜிமண்ட் படை அணிவகுத்தது. லெப்டினன்ட் பிரஜ்வால் காலா தலைமையில் 861வது ஏவுகணை ரெஜிமெண்ட்டை சேர்ந்த பிரமோஸ் சென்றது. கேப்டன் சுனில் தசரதே தலைமையில் ’தி அமிர்தசரஸ் ஏர்ஃபீல்ட்’ என்ற 27 ஏர் டிஃபன்ஸ் ஏவுகணை ரெஜிமெண்ட் அணிவகுத்தது.
மேலும் பல்வேறு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வகையிலான அணிவகுப்பும் நடைபெற்றது. இந்த குடியரசு தின விழாவில் எகிப்து அதிபர் அப்துல் பதே எல்-சிசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் டெல்லியில் நடைபெறும் அணிவகுப்பில் எகிப்து ராணுவத்தை சேர்ந்த 144 வீரர்கள் பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்றுக் கொண்டார்.