74-வது குடியரசு தினம் | வீரதீர செயலுக்கான பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: நாட்டின் 74-வது குடியரசு தினவிழாவையொட்டி, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது, காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

74வது குடியரசு தின விழாவை ஒட்டி காலை 8 மணியளவில் கடற்கரை சாலையில் உள்ள உழைப்பாளர் சிலை அருகே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றினார். அவர் கொடியேற்றியவுடன் ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவர் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

முன்னதாக ஆளுநர் தனது உரையில், “இந்திய பெருமைகளில் ஒன்றாக தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழி வளர்ச்சிக்காக மத்திய அரசு பாடுபடுகிறது. இலங்கை தமிழர் நலனுக்காக மத்திய அரசு உதவுகிறது. அங்கு வசிக்கும் தமிழர்களுக்காக வீடுகள் மற்றும் மருத்துவமனைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழர் நலனுக்காக தமிழக அரசும் உதவுகிறது.வாழ்க தமிழ்நாடு. வாழ்க பாரதம்” என்று குறிப்பிட்டார்.

இதனைத்தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், மத நல்லிணக்கத்துக்கான கோட்டை அமீர் விருது. காந்தியடிகள் காவலர் பதக்கம் உள்ளிட்டவற்றை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம்: கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஏ.இனயத்துல்லாவுக்கு கோட்டை அமீர் மத நல்லிணக்கப் பதக்கம் வழங்கப்பட்டது.

வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள்: அரசு ஊழியர் பிரிவில், சென்னையைச் சேர்ந்த தலைமைக் காவலர் பெ.சரவணனுக்கும், வேலூரைச் சேர்ந்த ஆண் செவிலியர் ஜெயக்குமார் பொன்னரசுக்கும் வழங்கப்பட்டது.

பொதுமக்கள் பிரிவுக்கான விருது, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த அந்தோணிசாமி, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீ கிருஷ்ணன், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த அ.செல்வம் ஆகியோருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டது.

வேளாண்மை துறை சிறப்பு விருது: திருத்திய நெல் சாகுபடி தொழில்நுட்பத்தினை கடைப்பிடித்து அதிக உற்பத்தி திறன் பெரும் விவசாயிக்கான வேளாண்மை துறையின் சிறப்பு விருது புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தாவுக்கு வழங்கப்பட்டது.

காந்தியடிகள் காவலர் பதக்கம்: சென்னை மத்திய நுண்ணறிவுப்பிரிவு தலைமையக காவல் ஆய்வாளர் பிரியதர்ஷினி, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயமோகன், சேலம் மண்டலத்தின் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் சகாதேவன், விழுப்புரம் மணடலத்தின் மத்திய நுண்ணறிவுப் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் இனாயத் பாஷா, மற்றும் செங்கல்பட்டு மாவட்டம் அயல்பணி மத்திய நுண்ணறிவுப் பிரிவு தலைமைக் காவலர் சிவநேசன் ஆகியோருக்கு காந்தியடிகள் காவலர் பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.