கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் காதலியை கர்ப்பமாக்கி திருமணத்திற்கு மறுத்த காதலனை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வேளானந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ராமு. இவரது மகன் மணி(30) சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் மணியும், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் மூன்று வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இதையடுத்து, திருமணம் செய்து கொள்வதாக இளம்பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி மணி, இளம் பெண்ணுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதனால் இளம் பெண் கர்ப்பமானார். இந்நிலையில் இளம் பெண் மணியின் வீட்டிற்குச் சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.
ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த மணி, திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்தால், கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து அந்த இளம்பெண் கள்ளக்குறிச்சி மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், மணி, அவரது தாய் மற்றும் இரண்டு சகோதரிகள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், மணியை கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.