குடியரசு தின தேநீர் விருந்து; ஆளுநர் அழைப்பை நிராகரித்த கூட்டணிக் கட்சிகள் – திமுக நிலைப்பாடு என்ன?

ஒவ்வோர் ஆண்டும், குடியரசு தினத்தன்று மாலை கிண்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து உபசரிப்பு நிகழ்ச்சி நடைபெறும். தமிழ்நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு ஆளுநர் தேநீர் விருந்தில் கலந்துகொள்ள அழைப்பிதழ் வழங்குவார். அதை ஏற்றுக் கட்சித் தலைவர்கள் தேநீர் விருந்தில் கலந்துகொள்வார்கள். இந்த நிலையில், சமீபகாலமாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழ்நாடு அரசுக்கும் இடையிலான முட்டல் மோதல் அதிகரித்து வருகிறது.

ஸ்டாலின், ஆளுநர் ரவி

தமிழ்நாடு அரசு அனுப்பிய மசோதாக்களைக் கிடப்பில் போட்டு வைத்திருப்பது, தமிழ்நாட்டைத் தமிழகம் என்று கூறியது, சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையிலிருந்த அம்பேத்கர், அண்ணா, கருணாநிதி, உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும், திராவிட மாடல் உள்ளிட்ட வார்த்தைகளையும் ஆளுநர் தனது உரையில் தவிர்த்து ஆளும் தி.மு.க-வையும், அதன் கூட்டணிக் கட்சிகளையும் கொதிப்படையச் செய்தது. ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக தி.மு.க கூட்டணிக் கட்சியினர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார்கள். இதேபோல, பொங்கல் பண்டிகைக்கு வெளியிட்ட அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரும் அரசின் இலச்சினையும் இடம்பெறவில்லை. இதற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இது தமிழ் மக்களின் உணர்வை புண்படுத்தியதாகவும் அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்தனர்.

திருமாவளவன்

இந்த நிலையில், ஆளுநரின் தேநீர் விருந்தை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், வி.சி.க, மனித நேய மக்கள் கட்சி உள்ளிட்ட தி.மு.க கூட்டணிக் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்திருக்கின்றன. இது தொடர்பாக வி.சி.க தலைவர் திருமாவளவன் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “குடியரசு தினத்தில் ஆளுநர் மாளிகையில் நடைபெறவிருக்கும் தேநீர் விருந்துக்கு வி.சி.க-வைச் சேர்ந்த நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்ததற்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன். ஆனால், அந்த விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறோம். மேலும் தமிழக ஆளுநரை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துகிறோம்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை, “நீட் தேர்வு, ஆன்லைன் ரம்மி, பல்கலைக்கழகச் சட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டிய ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். இது தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் பாதிக்கிறது. ஆளுநர் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு எதிராகவும் பேசி வருகிறார். இதைக் கண்டித்து ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்”என்று தெரிவித்திருக்கிறார்.

ஜவாஹிருல்லா

மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, “ஆளுநர் வரம்பை மீறி தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். சட்டமன்றத்தில் இயற்றிய மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்காமல் தமிழக மக்களை வஞ்சித்து வருகிறார். இதனால், ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” எனக் கூறியிருக்கிறார்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், “தமிழ்நாட்டில் பிரிவினையையும், மோதல்களையும், குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் ஆளுநர் செயல்பட்டு வருகிறார். சொல்லப் போனால் பா.ஜ.க-வின் அடியாளாக அவர் செயல்பட்டு வருகிறார். எனவே, ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என்று தெரிவித்திருக்கிறார்.

அதிமுக – அண்ணாமலை

இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், ம.தி.மு.க ஆகிய கட்சிகளும் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக அறிவித்திருக்கின்றன. ஆனால், தி.மு.க இதுவரையில் வெளிப்படையாக அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இந்த நிலையில், ஆளுநர் ரவி நேற்றைய தினம் முதல்வர் ஸ்டாலினை போனில் தொடர்புகொண்டு அழைப்பு விடுத்திருக்கிறார். மேலும், ஆளுநரின் செயலர் முதல்வரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தி.மு.க மூத்த நிர்வாகிகளிடம் விசாரிக்கையில், “ஆளுநர் தேநீர் விருந்தை ஏற்பதா, புறக்கணிப்பதா என்று இதுவரையில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. இன்று மதியத்துக்குள் இது குறித்து தெரியவரும்” என்றனர். இதுபோக பா.ஜ.க., அ.தி.மு.க, த.மா.கா ஆகியவை தேநீர் விருந்தில் கலந்துகொள்ளவிருக்கின்றன. தே.மு.தி.க, பா.ம.க ஆகிய கட்சிகள் தங்களின் முடிவை இன்னும் சொல்லவில்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.