கரூர்: குடியரசு தின விழாவில் டாஸ்மாக் டிஎம் உள்ளிட்ட 4 பேருக்கு பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கியது சர்ச்சையையும், சமூக வலைத்தளங்களில் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் 74வது குடியரசு தின விழா கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பங்கேற்று தேசியக் கொடியை ஏற்றிவைத்து காவல்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில சிறப்பாக பணியாற்றிய அலுவலர்கள், பணியாளர்களுக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.
இதில் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் சண்முக வடிவேல், மேற்பார்வையாளர்கள் சிவகுமார், ஆறுமுகம், விற்பனையாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேருக்கு கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மாவட்டத்தில் டாஸ்மாக் நிர்வாகத்திற்கு வருவாய் ஈட்டும் பணியை சிறப்பாக மேற்கொண்டமைக்காக பாராட்டி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நற்சான்றிதழ் வழங்கப்படுவதாக அந்த பாராட்டு சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மதுவிற்பனையை அதிகரித்த அதிகாரி மற்றும் ஊழியர்களுக்கு குடியரசு தின விழாவில் கேடயமும், பாராட்டு சான்றிதழும் வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.