புதுடெல்லி: மூக்கு வழியாக செலுத்தப்படும், உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்தை, மத்திய அமைச்சர்கள் மன்சுக் மாண்டவியா, ஜிதேந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அறிமுகம் செய்துவைத்தனர்.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் நிறுவனம், கோவேக்சின் என்ற பெயரிலான கரோனா தடுப்பூசியை தயாரித்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த தடுப்பூசி, கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்களுக்கு போடப்பட்டது. தற்போது பூஸ்டர் தடுப்பூசியாகவும் இது போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம், வாஷிங்டன் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மூக்கு வழியாக செலுத்தும் கரோனா தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இதற்கு `இன்கோவாக்’ எனப் பெயரிடப்பட்டு உள்ளது. மூக்கு வழியாக செலுத்தப்படும் உலகின் முதல் கரோனா தடுப்பு மருந்து இதுவாகும்.
அனைத்துகட்டப் பரிசோதனைகளும் வெற்றியடைந்த நிலையில், அவசரகால அடிப்படையில் இன்கோவாக் தடுப்பு மருந்தை 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்த மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு கடந்த செப்டம்பரில் ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து, பூஸ்டர் டோஸாகவும் பயன்படுத்த கடந்த டிசம்பரில் அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில், குடியரசு தினத்தையொட்டி இன்கோவாக் சொட்டு மருந்தை மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் ஆகியோர் டெல்லியில் நேற்று அறிமுகப்படுத்தினர். இந்த மருந்து மத்திய, மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் ரூ.325-க்கும், தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.800-க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. இரண்டு டோஸ் தடுப்பு மருந்தை 28 நாட்கள் இடைவெளியில் போட்டுக்கொள்ள வேண்டும்.
இன்கோவாக் சொட்டு மருந்து கடந்த மாதம் கோவின் இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்நிலையில், இணையதளம் மூலம் இந்த தடுப்பு மருந்துக்கு முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.