தஞ்சாவூர்: போரவூரணி அருகே குறிச்சி ஊராட்சியில் அடிப்படை வசதி இல்லை எனக் கோரி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்ட கிராமத்தினர் இன்று நடைபெற்ற கிராம சபை கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஊராட்சிக்குட்பட்ட குறிச்சி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம், பேராவூரணி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் எஸ்.வீரமணி முன்னிலையில் நடைபெற்றது. இதில், ஊராட்சி மன்றத் தலைவி கே.வைரக்கண்ணு, துணைத் தலைவர் சின்னையன், ஊராட்சி செயலர் எஸ்.பாலசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது, குறிச்சி 1, 2-ம் வார்டு பகுதி மேட்டுவயல் கிராமத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளாக சாலை, தூய்மைப் பணி, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை என கூறி, ஊர் எல்லையில், பிளக்ஸ் அடித்து வைத்து இருந்தனர். கிராம சபை கூட்டம் துவங்கியதும், கடந்த கிராம சபை கூட்டத்தில் சாலை அமைத்து தருவதாக கூறி தீர்மானம் நிறைவேற்றியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கோரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சின்னையன் உள்ளிட்ட கிராம மக்கள் கிராம சபை கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
அப்போது, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் வீரமணி, வரும் ஏப்ரல் மாதத்துக்குள்ளாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய நடவடிக்கை எடுக்க தீர்மானம் நிறைவேற்றுவதாகவும், கையெழுத்து போடுங்கள் என கூறியும், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் தீர்மான நோட்டில் கையெழுத்து போடாமல் சென்று விட்டனர்.