வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் மூன்று ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இந்தியாவுக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்டதற்கு அங்குள்ள இந்திய துாதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கடந்த சில நாட்களில், மூன்று ஹிந்து கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அவற்றை சூறையாடியதுடன், கோவில் சுவரில், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களும் எழுதப்பட்டன.
முதல் தாக்குதல், மெல்போர்னில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் நடந்தது. இதைத் தொடர்ந்து விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோவில், மெல்போர்னில் உள்ள இஸ்கான் கோவிலிலும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இது குறித்து கான்பராவில் உள்ள இந்திய துாதரகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தத் தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்கள் மற்றும் சீக்கியருக்கான நீதி என்ற அமைப்பினர், வெளியில் இருந்து வந்த உத்தரவுகளின்படி இந்த தாக்குதல்களில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை எழுதியுள்ளனர். இது மக்களிடையே வெறுப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நடத்தப்பட்டுள்ளது. பல மொழி, மத நம்பிக்கை, கலாசாரங்களை உடையவர்களாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவில் உள்ள இந்தியர்கள் ஒற்றுமையுடன் உள்ளனர்.
இதுதான் இந்தியாவின் அடிப்படை பாரம்பரியமாகும். இதை சீர்குலைக்கும் வகையில் நடந்துஉள்ள தாக்குதல்கள் தொடராமல் இருக்க, ஆஸ்திரேலியா அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இந்த தாக்குதல்களில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement